"நான் போட்டிருக்கும் இந்த மாலை..." தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்! - Dhanush | Karungali Malai
தனது கழுத்தில் அணிந்துள்ள மாலை துவங்கி, ஹேட்டர்ஸ், ரசிகர்களின் இசை ரசனை வரை எனப் பல விஷயங்களை நடிகர் தனுஷ் பகிர்ந்து கொண்டார்.
தனுஷ் இயக்கி நடித்துள்ள `இட்லி கடை' அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், தனது கழுத்தில் அணிந்துள்ள மாலை துவங்கி, ஹேட்டர்ஸ், ரசிகர்களின் இசை ரசனை வரை எனப் பல விஷயங்களை நடிகர் தனுஷ் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய இசை சூழல் பற்றிப் பேசியவர், "இப்போதைய இசை சூழலும் மாறிவிட்டது. முன்பு 40 ரூபாய் கொடுத்து ஒரு பாட்டு கேசட் வாங்கினால் பிடிக்கிறதோ, இல்லையோ அவற்றை 4, 5 முறை கேட்போம். ஆனால் இப்போது நம் உள்ளங்கையில் கோடிக் கணக்கில் பாடல்கள் இருக்கின்றன. ஒரு பாட்டுக்கு 10 செகண்ட்தான் டைம். பிடிக்கவில்லை என்றால், அடுத்த பாட்டு என கடந்து செல்கிறோம். எனவே, இன்னும் ஆரோக்கியமான இசை வரவேண்டும் என நினைக்கிறேன். அடுத்த தலைமுறை கலைஞர்கள், சாய் அப்யங்கர் போன்றோர் வருகிறார்கள். ஒரு தலைமுறையின் இசை ரசனையை உருவாக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அதைச் செய்வீர்கள் என நம்புகிறேன்" என்றார்.
தொடர்ந்து கழுத்தில் அணிந்துள்ள மாலை பற்றிப் பேசிய அவர், "இது என்ன மாலை என எனக்கு நிஜமாகத் தெரியாது. ஒருமுறை என் பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. அவரைப் பார்க்க ஊருக்குச் சென்றேன். அப்போது அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தாத்தாவுடைய போட்டோவில் இந்த மாலையைக் கவனித்தேன். ’இது, நீ வாங்கிப் போட்ட மாலையா? இல்ல, தாத்தாவோட மாலையா’ என பாட்டியிடம் கேட்டேன். அதற்கு அவர், ’உங்க தாத்தா 30, 40 வருடம் தவம் பண்ண மாலைடா. அவர் இறந்தபின்னால், அவரோட போட்டோவுக்கு போட்டிருந்தேன்’ என்றார். ’இதை, நான் எடுத்துக் கொள்ளலாமா? எனக்கு இதைத் தருவாயா’ எனக் கேட்டேன். உடனே எழுந்து போய் போட்டோவிடம், ’பார்த்தீர்களா.. உங்களுக்கு எத்தனை பேரன்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த மாலை வேண்டும் என இவன்தான் கேட்கிறான்’ என என் பாட்டி பேசி, பின்பு என்னை ஆசிர்வாதம் செய்து விபூதி வைத்து கழுத்தில் அணிவித்தார். அப்போது முதல் என் முன்னோர்கள் என்னைக் காப்பது போன்று உணர்கிறேன். நிறைய பேர் இதைப் போட்டால் அது நடக்கும், இது நடக்கும் என்கிறார்கள். ஆனால் இது எங்க தாத்தா மாலை" என மாலைக்குப் பின்னிருந்த கதையை கூறினார்.
தொடர்ந்து, ”தனுஷ் என்று சொன்னதும் தங்களுக்கு என்ன ஞாபகம் வரும்” என்பதற்குப் பதிலளித்த, "ஒரு நல்ல தகப்பன் என்பது ஞாபகம் வரும். எத்தனையோ விஷயங்களில் என்னைப் பற்றி நான் பெருமையாகச் சொல்லிக்கொள்ள மாட்டேன். இந்த ஒரு விஷயத்தில் நான் ஒரு நல்ல தகப்பன் என்று நெஞ்சை நிமிர்த்திப் பெருமைப்படுவேன்" எனக் கூறியவர் சட்டென, "என்ன லிங்கா.. நம்மள வீடியோ எடுக்கவே இல்ல" எனக் கேட்டதும் மொத்த அரங்கமும் அலறியது.
மேலும் அவரிடம், ”உங்கள் வாழ்க்கையை ஒரு பயோபிக்காக எடுத்தால் அதற்கு என்ன பெயர் வைக்கலாம்” எனக் கேட்கப்பட, "இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. 48 வயதாகிவிட்டது. எதுவும் பெரிதாக செய்யாதது போல் இருக்கிறது. பயோபிக் பற்றிப் பேச வேண்டிய சமயம் இதுவல்ல" என்றார்
’குபேரா’ பட நிகழ்வில் தனுஷ் முறைத்து பார்த்த போட்டோவை திரையில் காட்டி அது பற்றி கேட்கப்பட,"சில சமயம் நடிகர்கள் நம்மையும் அறியாமல், கேட்கும் இசையோ, பேச்சோ நம்மை ஆட்கொள்ளும். அப்படி ’ராயன்’ படப் பாடல் குழந்தைகள் பாடியபோது, என்னை அது ஆட்கொண்டது. என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது தெரியும். என்ன நாம் ஒன்று பேசுகிறோம், இவன் பைத்தியம் மாதிரி வேறு ஏதோ செய்கிறான் என்று. அப்படி என்னையும் மீறி வந்த ஒன்றுதான் இது” என்றார்.
இதற்கு அடுத்து, சில வார்த்தைகள் தனுஷிடம் கூறப்பட்டு, அவற்றுக்கு தனுஷ் மனதில் தோன்றுபவை என்ன எனச் சொல்லுமாறு தொகுப்பாளர் கேட்டார். அந்த வகையில் ’ஹேட்டர்ஸ்’ குறித்து கேட்டார். அதற்கு அவர், ”ஹேட்டர்ஸ் என்ற கான்செப்ட்டே இல்லை. அப்படி யாருமே கிடையாது. எல்லோரும் எல்லா படமும் பார்ப்பார்கள். ஒரு குறிப்பிட்ட குழு, அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக 30 பேர் 300 ஐடியில் இருந்து பரப்புவதுதான் ஹேட். அதனால் ஒன்றுமே ஆகாது. அந்த 30 பேருமேகூட படம் பார்ப்பார்கள்” என்றார்.
இறுதியில் அரசியல் குறித்து கேட்கப்பட்டபோது, அதற்கு, ”புரியாது” எனச் சொல்லி தன் பேச்சினை முடித்தார்.