தனுஷ் நடிக்கும் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில், பாலாஜி இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி’. இந்தப் படத்தில் தனுஷ் புறா வளர்க்கும் தாதா போன்ற வேடத்தில் நடித்திருப்பார். படத்தில் அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. சில பாடல்களில் தனுஷ் போட்ட குத்தாட்டம், அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்தப்படத்தில் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. ஹீரோ, இயக்குனர், ஒளிப்பதிவாளர் என சகலத்திலும் மாற்றம் இல்லை. இந்தப் படத்தை தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். முதல் பாகத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், ‘மாரி 2’வில் ப்ரேமம் புகழ் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இரண்டாம் பாகத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் சென்னையில் 2ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.