வேட்டை தீவிரம்.. டெல்லியில் முகாமிட்டுள்ள தனுஷ்.. அடுத்த திட்டம் இதுதான்?
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். சமீபகாலமாகத் தனது ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவரது ரசிகர் மன்றம் தற்போது 'தனுஷ் நற்பணி இயக்கம்' என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய கொடி மற்றும் சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சட்டமன்றத் தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையே, தனுஷ் 'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதற்காகத் தேர்தல் ஆணையத்தில் பெயரைப் பதிவு செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவல் குறித்து தனுஷ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்று வரை வெளியாகவில்லை.
இந்நிலையில், நடிகர் தனுஷ் இன்று டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லிக்குச் சென்றிருக்கும் தனுஷ், அங்கு முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தேர்தல் ஆணையத்தில் தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பயணம் அரசியல் தொடர்பானதா, கட்சிப் பதிவு அல்லது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து தனுஷ் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.
தனுஷின் டெல்லிப் பயணம், ரசிகர் மன்றத்தின் மறுசீரமைப்பு, புதிய கொடி அறிமுகம் என அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், அவரது வருகை தமிழகத்தில் உள்ள பல கட்சிகளுக்கும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

