''மனிதநேயம் செழிக்கிறது'' - சிவனைப்பார்த்து அசந்து போன சிரஞ்சீவி..!
நீலகிரி மாவட்டம், குன்னுார் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவன். கடந்த, 30 ஆண்டுகளாக தபால் துறையில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவரது பணியில் சிறப்பு என்னவென்றால், நாள்தோறும் 15கி.மீ அடர்ந்த காட்டில் பயணம் செய்து மக்களுக்கு தபால்களை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து ஐஏஎஸ் சுப்ரியா சாஹூ தனது டிவிட்டர் பக்கத்தில் “குன்னூரில் அணுக முடியாத பகுதிகளில் அஞ்சல் அனுப்ப தபால்காரர் டி.சிவன் கடினமான காடுகள் வழியாக தினமும் 15 கி.மீ. பயணித்தார். காட்டு யானைகள், கரடிகள், வழுக்கும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றை கடந்து கடந்த 30 வருடமாக தனது பணியை அர்பணிப்புடன் செய்த தபால்காரர் சிவன். இவர் கடந்த வாரம் ஓய்வுப் பெற்றுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
தபால்காரர் சிவனின் சேவையை நடிகர் சிரஞ்சீவி பாராட்டியுள்ளார். ஐஏஎஸ் சுப்ரியாவின் ட்விட்டர் பதிவை ஷேர் செய்துள்ள சிரஞ்சீவி, '' பலருக்கு, எல்லா துன்பங்களையும் மீறி தங்கள் வேலையைச் செய்வது மிகுந்த திருப்தியைத் தருகிறது. இதுபோன்ற பெரும் மனம் படைத்தவர்களுக்கு நன்றி. மனிதநேயம் செழிக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்