பிஜூமேனன் துணை நடிகரா? - அய்யப்பனும் கோஷியும் படத்தை ஜூரிகள் பார்த்தார்களா? இல்லையா?

பிஜூமேனன் துணை நடிகரா? - அய்யப்பனும் கோஷியும் படத்தை ஜூரிகள் பார்த்தார்களா? இல்லையா?
பிஜூமேனன் துணை நடிகரா? - அய்யப்பனும் கோஷியும் படத்தை ஜூரிகள் பார்த்தார்களா? இல்லையா?

தேசிய விருதுகளை அள்ளி தென்னிந்திய சினிமாக்கள் பாலிவுட்டை மீண்டும் மிரள வைத்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழில் சூரரைப் போற்று படம் 5 விருதுகளையும், மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் 4 விருதுகளையும் அள்ளி குவித்தன. அய்யப்பனும் கோஷியும் படத்தை பொறுத்தவரை சிறந்த இயக்குநர் - கே.ஆர்.சச்சிதானந்தன்; சிறந்த உறுதுணை நடிகர் - பிஜூமேனன்; சிறந்த பின்னணி பாடகர் (பெண்) - நஞ்சம்மா மற்றும் சிறந்த சண்டை இயக்கம் - ராஜசேகர், மாஃபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஜூமேனன் எப்படி உறுதுணை?

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் பிஜூமேனனுக்கு உறுதுணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யமாக உள்ளது. அய்யப்பனும் கோஷியும் படத்தில் பிஜூமேனன் கதாபாத்திரத்தை எப்படி உறுதுணை நடிகர் என்று வரையறை செய்ய முடியும். இது மிகவும் அபத்தமான முடிவாகவே தோன்றுகிறது. ஏன் என்றால் உண்மையில் படத்தின் ஹீரோவே அய்யப்பன் கதாபாத்திரம் தான். ஒருவேளை பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் வேறு யாராது நடித்திருந்தாலோ அல்லது அய்யப்பன் கதாபாத்திரத்தில் பிரித்விராஜும், கோஷி கதாபாத்திரத்தில் பிஜூமேனனும் நடித்திருந்தால் கூட அய்யப்பன் கதாபாத்திரம்தான் ஹீரோ என்று சொல்லியிருப்போம். அப்படியில்லையென்றாலும் இரண்டு கதாபாத்திரங்களும் லீட் ரோல் தான் என்பதுதான் பெரும்பாலானோரின் பொதுவான கருத்து. இதில் பிஜூமேனன் கதாபாத்திரம் எப்படி உறுதுணை நடிகர் ஆனது என்றே தெரியவில்லை. கதையின் சுருக்கம் குறித்தும் அதில் இருவரது கதாபாத்திரத்தின் தன்மைகளை சற்றே அலசிப்பார்த்தால் இது நமக்கு புரியும்.

மலையாளத்தில் 2020ம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அய்யப்பனும் கோஷியும். நேரடியாகவும், கதையோட்டத்தில் நூலிழை போலும் ஒரு காட்டமாக அரசியலை காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் சச்சி.

அய்யப்பன் நாயர் Vs கோஷி குரியன்:

முரட்டுத்தனமும், மக்களுக்காக போராடும் புரட்சிகரத் தன்மையும் கொண்ட ஆதிவாசி கம்யூனிஸ்ட் இளைஞனான அய்யப்பனை முறைப்படுத்தி காவல்துறைக்கு கொண்டு வருவார் அப்பகுதி எம்.எல்.ஏ. அய்யப்பனை முண்டூர் மாடன் என்றுதான் அழைப்பார்கள். காவல்துறையில் தன்னுடைய மூடர் குணத்தை குறைத்துக் கொண்டு பணியாற்றி வருவார். மாவோயிஸ்டாக இருந்து பின்னர் அந்த நடைமுறையில் இருந்து விலகிய பெண்ணையும் அவர் திருமணம் செய்து கொள்வார். நல்ல காவல் அதிகாரியாக பணியாற்றி பல விருதுகளையும் பெற்று இருப்பார்.

கோஷியோ, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அந்த அதிகார பின்புலத்தை கொண்டவர். அதேபோல் அவரது தந்தை குரியன் ஜான் அரசியலில் முக்கிய பிரமுகர்.

இந்தக் கதையில் முதலில் பிரச்னையை தொடங்குவதே கோஷிதான். ராணுவ பின்புலத்தை கொண்ட கோஷியின் சேட்டையான நடவடிக்கைகள் தான் நேர்மையான போலீசான அய்யப்பனின் ஈகோவை தூண்டுகிறது. மதுபானம் குடிப்பதும் வைத்திருப்பதும் தடைசெய்யப்பட்ட அட்டப்பாடி வனப் பகுதியில், மது பாட்டில்களுடன் ஊட்டி செல்லும் வழியில் போலீஸ் பரிசோதனையில் கோஷி பிடிபடுகிறான். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான கோஷி சோதனையின் போது, போலீஸை அடிக்கப் பாய்கிறான். காவல் நிலையத்திலும் கோஷியின் அலட்சியம் அளவுகடந்து வெளிப்படுகிறது. இவையெல்லாம் தான் அய்யப்பனின் ஈகோவை வெளிக்கொணர வைக்கிறது. ராணுவ பின்புலம் கொண்டவர் என்று தெரிந்த பிறகு அய்யப்பனும் சற்றே பணிந்து போகிறார். அந்த பணிவை பயன்படுத்தி ஒரு வீடியோவை எடுத்து கோஷி வெளியிடும் வீடியோ தான் அய்யப்பனின் வேலையை இழக்கும் நிலைக்கும் கொண்டு செல்கிறது. இதனால் பிரச்னையை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு செல்கிறது.

இந்த கதையின் இரண்டு தூண்களாக அய்யப்பனாக நடித்த பிஜூ மேனனும், கோஷியாக நடித்த பிரித்விராஜூம் இருப்பார்கள். இருவரது விட்டுக் கொடுக்காத மிரட்டலான நடிப்புதான் படத்தை வெறு லெவலுக்கு எடுத்துச் சென்றது. இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும், மோதிக்கொள்ளும் காட்சிகளில் தீப்பொறி பறக்கும். ஒரு கதையாக பார்த்தால் இருவரில் முன்னணி லீட் ரோல் பிஜூமேனனுக்கு தான். பிரித்விராஜ் என்பதால் அவருக்கு அதிக வெயிட்டேஜ் கொடுத்து இருக்கிறார்கள். வில்லத்தனம் தெரியாமல் பார்த்துக் கொண்டுள்ளார் இயக்குநர். ஏனெனில் அய்யப்பன் கதாபாத்திரம் தான் மக்களுக்கான கம்யூனிஸ்ட் லீடராகவும், மக்களுக்கான காவலர் ஆகவும் இருந்துள்ளார்.

இந்தக் கதையைப் பொறுத்தவரை எப்படி பார்த்தாலும் பிஜூமேனன் தான் ஹீரோ. அதற்கு கதையின் கருவையும், திரைக்கதை விவரிக்கப்பட்ட விதத்தையும் பார்த்தாலே எளிமையாகவே புரியும். இப்படியிருக்கையில் தேசிய விருதிற்கான தேர்வு கமிட்டியில் உள்ள ஜூரிகள் எப்படி இதனை கவனிக்காமல் விட்டார்கள் என்று புரியவில்லை. அவரை உறுதுணை நடிகராக அறிவிப்பு அந்த கதாபாத்திரத்திற்கே அவமதிப்பான ஒன்றாகும்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com