”உங்கள் மனம் புண்படும்படி..” - ஆஷிஷ் வித்யார்த்தியின் 2வது திருமணம் குறித்து முதல் மனைவியின் பதிவு!

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியின் முன்னாள் மனைவி பதிவிட்டிருக்கும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவா, ராஜோஷி
ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவா, ராஜோஷி twitter page

டெல்லியில் பிறந்தவரான நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி, இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஒடியா, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட 11 மொழிப் படங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

தமிழ் சினிமாவில், விக்ரமின் ‘தில்’ படத்தில் டிஎஸ்பி கதாபாத்திரத்தில் அறிமுகமான ஆசிஷ் வித்யார்த்தி, அப்படத்தில் வில்லனாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து ‘பகவதி’, ‘தம்’ ஆகியப் படங்களில் நடித்த அவர், விஜய்யின் ‘கில்லி’ படத்தில் குணசித்திர கதாபாத்திரத்திலும் கலக்கியிருப்பார்.

இந்தப் படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அவர், முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ‘Drohkaal’ என்ற இந்திப் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் ஆசிஷ் வித்யார்த்தி பெற்றுள்ளார். சமீபகாலமாக குறிப்பிட்ட அளவிலான படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், அசாம் மாநிலம் குவாஹத்தியைச் சேர்ந்த தொழில்முனைவோரான (entrepreneur) ரூபாலி பருவா என்பவரை, தனது 60 வயதில் இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஆசிஷ் வித்யார்த்தி திருமணம் செய்த ரூபாலி பருவாவுக்கு 33 வயது என்று கூறப்படுகிறது.

ஃபேஷன் தொழில்முனைவோரான ரூபாலி பருவா, கொல்கத்தாவில் ஃபேஷன் கடை ஒன்றை வைத்துள்ளார். இதேபோல், ஆசிஷ் வித்யார்த்தி, தனது வீடியோக்களுக்காக (vlogs) அடிக்கடி கொல்கத்தா செல்வது வழக்கம். ஆசிஷ் வித்யார்த்தியின் தாய் பெங்காலியைச் சேர்ந்தவர். ரூபாலி பருவாவை சந்தித்த தருணம் குறித்து ஆசிஷ் வித்யார்த்தியிடம் கேட்கப்பட்டதற்கு, “அது மிகப்பெரிய கதை. அதுகுறித்து பின்பு சொல்கிறேன்” என்று முடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இதுதொடர்பாக ரூபாலி பருவா பேசுகையில், “சில காலங்களுக்கு முன்பு சந்தித்துக்கொண்ட நாங்கள் இருவரும், எங்கள் உறவினை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல தீர்மானித்தோம். எனினும், எங்களது திருமணம் சிறிய குடும்ப நிகழ்வாக மட்டுமே இருக்க வேண்டும் என்று இருவரும் விரும்பினோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “சிறந்த ஆன்மாவைக் கொண்ட மிக நல்ல மனிதர் அவர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த நடிகை சாகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவா என்பவரை, நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி முதலாவதாக மணம் முடித்திருந்தார். இந்த தம்பதிக்கு ஆர்த் வித்யார்த்தி என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இவர்களுடைய திருமணம் குறித்து ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவியான ராஜோஷி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவுகளை வெளியிட்டு உள்ளார். அதில், ”உங்களை புரிந்து கொண்ட உங்களுக்கான நபர், அவர்களுக்கு நீங்கள் யார் என்பதை கேட்கமாட்டார்கள். உங்கள் மனதை எது புண்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரியும் என்பதால், அதனை செய்யமாட்டார்கள். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

User

மற்றொரு பதிவில், “அதீத சிந்தனையும், சந்தேகமும் இப்பொழுது முதல் உங்கள் மனதில் இருந்து நீங்கட்டும். குழப்பங்களை இந்த தெளிவு வெளியேற்றட்டும். அமைதியும், நிதானமும் உங்கள் வாழ்வை நிரப்பட்டும். நீண்டகாலமாக நீங்கள் வலிமையானவராக இருக்கிறீர்கள். உங்களுக்கான வாழ்த்துக்களை பெறுவதற்கு சரியான நேரம் இது. நீங்கள் இதற்கு தகுதியானவர் தான்” என்றும் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com