”யானை படப்பிடிப்பு நிறைவு" - இயக்குநர் ஹரி குடும்பத்தினருடன் ராதிகா சரத்குமார்
அருண் விஜய்யின் ‘யானை’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்புத்தளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா.
நடிகை ராதிகா சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’, சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’, அருண் விஜய்யின் ‘யானை’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். அதில், ஹரி இயக்கும் ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நிறைவடைந்துள்ளது. இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக இணைந்துள்ள இப்படத்தில் யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி நடிக்கிறார். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதிமுதல் ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நிறைவடைந்துள்ளது. இரண்டு வாரத்திற்கு முன்பு அருண் விஜய் காரைக்குடிக்குச் ’யானை’ இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காக காரைக்குடிக்குச் செல்லும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பிரியா பவானி ஷங்கர் மற்றும் ஹரி மனைவி ப்ரீத்தா விஜயகுமார், அவரது மகன்கள் உள்ளிட்டோருடன் இருக்கும் புகைப்படங்களைப் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ராதிகா பகிர்ந்து “யானை படப்பிடிப்பு நிறைவுபெற்றது. படத்திற்காக கடின உழைப்பை செலுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.