அர்ஜுன் -ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் க்ரைம் த்ரில்லர் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு
அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
'திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ படங்களுக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபுதேவாவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் அர்ஜுனுடன் இணையும் புதிய க்ரைம் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. அருள்குமார் தயாரிக்க தினேஷ் லக்ஷ்மணன் இப்படத்தை இயக்குகிறார். இந்த நிலையில், படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை படக்குழு தற்போது முடித்து உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் அருள்குமார் படம் குறித்து பேசும்போது ”இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இது மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும்.
இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் திரைக்கதையை முதன்முதலில் விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு க்ரைம்-த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும்.
மேலும், எங்கள் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை காண, மிக மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் தனது திறமையான இயக்கத்தின் மூலம், திட்டமிட்ட காலகட்டத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளார். விரைவில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கவுள்ளோம்” என்றுக் கூறியிருக்கிறார்.