ரூ.150 - க்கு மேல் டிக்கெட் விற்பனை இல்லை - விஷால்
திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “ஏப்ரல் 20ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு பணிகள் நாளை மறுநாள் தொடங்கும். திரையுலகினரின் வேலை நிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மெர்க்குரி படம் இந்த வாரம் வெளியாகும்.
தமிழ் திரைத்துறை ஜூன் முதல் முழுமையாக கணினிமயமாக்கப்படும். சினிமா டிக்கெட் விற்பனை இணையதளத்தை தயாரிப்பாளர் சங்கமே தொடங்க உள்ளது. அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதலாக எங்கும் டிக்கெட் விற்கப்படாது. முறையாக கண்காணிக்கப்படும். சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். நடிகர்களின் சம்பள விவகாரம் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். பிரச்னை தீர உதவிய முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு அளித்த பெஃப்சி தொழிலாளர் சங்கத்திற்கு நன்றி” என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை திரைப்படங்களை வெளியிடாமல் இருக்கலாம் என்ற உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “திரைப்பட வெளியீடுகளை நிறுத்துவது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்யும்” என்று விஷால் கூறினார்.
காலா படம் வெளியீடு குறித்த கேள்விக்கு, “காலா திரைப்படம் குறித்து படக் குழுவினர் தான் அறிவிப்பார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால், ரஜினி, கமல் படங்களை கர்நாடகாவில் வெளியிடமாட்டோம் என அங்குள்ளவர்கள் கூறுவது குறித்து அரசு தான் முடிவு செய்யும்” என்று விஷால் கூறினார்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் திரைத்துறையினர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் கே.சி.வீரமணி ஆகியோர் தலைமையில் திரைத்துறை அமைப்பினர் நேற்று நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.