'ஆர்யா' முதல் 'புஷ்பா' வரை: பான் இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜூன் #HappyBirthdayAlluArjun

'ஆர்யா' முதல் 'புஷ்பா' வரை: பான் இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜூன் #HappyBirthdayAlluArjun
'ஆர்யா' முதல்  'புஷ்பா' வரை:  பான் இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜூன் #HappyBirthdayAlluArjun

தெலுங்கு சினிமா நமக்கெல்லாம் கொடுத்த ஸ்டைலிஷ் ஸ்டார், டோலிவுட் பாக்ஸ் ஆபீஸின் கிங் நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாள் இன்று. இந்த தருணத்தில், அவர் திரைத்துறையில் கடந்து வந்த பாதையையும், இன்றைய பான் - இந்தியா கலாசாரத்தில் அவர் தொட்டிருக்கும் உயரத்தையும் கொஞ்சம் சொல்கிறோம்... தெரிஞ்சுக்கோங்களேன்! 

அல்லு அர்ஜுன்... டான்ஸ், ஸ்டன்ட் என எதுவாக இருந்தாலும் செம ஸ்டைலாக கலக்கும் இந்த ஸ்டைலிஷ் ஸ்டாரை, அவரது ரசிகர்கள் செல்லமாக Bunny என்று அழைப்பதுண்டு. சினிமாவுக்கு வந்த 20 வருடங்களை முடித்திருக்கும் அல்லு அர்ஜூனின் சினிமா கேரியரை சற்று திரும்பிப் பார்த்தால், அதில்  அவருக்கு மிக முக்கிய அடையாளத்தை கொடுத்த படமாக 'ஆர்யா' படம் இருக்கும். தனது 3-வது படத்திலேயே தெலுங்கு, தமிழ், மலையாள ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜூன், அதற்கு அடுத்த நடித்தப் படம்தான் 'பண்ணி'. இதற்கு பிறகு அவருக்கு தெலுங்கில் தொட்டதெல்லாம் ஹிட்டாகவே முடிந்தது.

இருப்பினும் தெலுங்கு தாண்டி பிற மொழிகளிலும் ஹிட் அடித்தது `அலா வைகுந்தபுரமுலோ’ திரைப்படம். படத்தின் ஹிட்டை தொடர்ந்து, கொரோனா நேரத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நேரடி ஹிட்டும் கொடுத்தது வைகுந்தபுரம். இப்படத்தின் மிகப்பெரிய ஹிட்டுக்கு காரணமாக, `புட்டபொம்மா’ `சமஜவரகமனா’ போன்ற பாடல்களும் அதன் மெட்டும், அதற்கேற்ற அல்லு அர்ஜூனின் நடனமும் முக்கிய காரணமாக அமைந்தது. இதை தனது பேட்டியொன்றில் குறிப்பிட்ட அல்லு அர்ஜூன், `வைகுந்தபுரம் திரைப்படம், என் சினிமா கேரியர்ல ஒரு ஹை-பாயிண்ட்’ என்று சொல்லியிருப்பார்.

வைகுந்தபுரம் படத்துக்குப் பிறகு, அல்லு அர்ஜூனின் சினிமா கேரியரை இந்திய அளவில் பிரமாண்டமாக உயர்த்தியது ’புஷ்பா’ திரைப்படம். `பான் இந்தியா’ கலாசாரம் இந்தியாவில் உயர்ந்தபோது புஷ்பா படத்தின் முதல்பாகம் வெளியாகியிருந்தது. கொரோனா நெருக்கடியையும் தாண்டி, புஷ்பாவில் தனது நடனாத்தாலும் ஸ்டைலாலும் அசால்டாக வசூலை அள்ளிக்குவித்தார் அல்லு அர்ஜூன். புஷ்பா திரைப்படம், உலகளவில் ஒரேவாரத்தில் ரூ.159 கோடி வசூலை அள்ளியதாக தகவல்கள் வெளியாகின. கொரோனா நேரத்தில், தியேட்டர்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவியபோதும்கூட வெளியான ஒரு திரைப்படம், அந்த சவால்களையெல்லாம் தாண்டி ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாயை தாண்டியது. இந்த ஒரு விஷயம்தான், அல்லு அர்ஜூனின் ப்ரொஃபஷனல் க்ராஃபை இந்திய அளவில் உச்சத்துக்கு கொண்டுப்போனது.

`புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைச்சியா... ஃபய்ர்டா’ என தாடியை ஸ்டைலாக தடவியபடி அல்லு அர்ஜூன் பேசும் வசனம், இந்தியா அளவில் மட்டுமல்ல... இன்ஸ்டா ரீல்ஸ் வரை உலகளவில் அடிதூள் ஹிட்டாக அமைந்தது. அந்த வகையில் புஷ்பா மூலம் `ஐகான் ஸ்டாராக’வும் மாறினார் டோலிவுட்டின் இந்த செல்ல Bunny. பல கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்களும் கூட அல்லு அர்ஜூனின் புஷ்பா ஸ்டைலை செய்து மகிழ்ந்த தருணங்களும் நடந்தன. தென்னிந்திய நடிகரொருவருக்கு, எல்லா பக்கமும் இவ்வளவு பெரிய வரவேற்பு, அதுவும் கொரோனா நேரத்திலும்கூட காத்திருந்து திரையரங்குகளுக்கு சென்று பார்க்கும் அளவுக்கான க்ரேஸ் என்றால், அது அல்லு அர்ஜூனுக்கு மட்டுமே நிகழ்ந்த அதிசயம்தான்.

தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த படத்தில் ரூ.100 கோடி வரை சம்பளம் பெற உள்ளார் அல்லு அர்ஜூன் என்பது போன்ற செய்திகள் வெளியாகின. புஷ்பா மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் என்ட்ரி கொடுத்ததால், அல்லு அர்ஜூனின் சினிமா க்ராஃப் பன்மடங்காக உயர்ந்துள்ளது. அந்தவகையில் இப்போது அல்லு அர்ஜூன், இந்திய அளவில் மிகப்பெரிய மாஸ் ஓப்பனிங் கொண்ட ஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டாரே!

திரையில் க்ராஃப் எந்தளவுக்கு ஸ்டைலாக உயர்ந்ததோ, அதேயளவுக்கு பெர்சனல் வாழ்க்கையையும் நேர்த்தியாக கொண்டு செல்பவர் இந்த ஸ்டைலிஷ் ஐகானிக் ஸ்டார். அந்தவகையில் தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நாயகர்களில் ஒருவரராக தற்போது மாறியுள்ள அல்லு அர்ஜுன், அடிப்படையில் வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர். எத்தனையோ வாகனங்கள் அல்லு அர்ஜூனிடம் இருந்தாலும், அவரின் ஃபால்கான் வேனிட்டி வேன்-தான் அவருடைய ஷூட்டிங் ஃபேவரைட். ஷூட்டிங்க்கு பயன்படுத்துவதற்காகவே அல்லு அர்ஜூன் தனக்கென பிரத்யேகமாக வாங்கி வைத்திருக்கும் வேனான இது, `AA' லோகொவுடன் அசத்தலான இண்டீரியர்ஸூடன், சில்வர் மற்றும் கருப்பு நிறத்தை அடிப்படையாக கொண்டு ஸ்டைலாக பிரத்யேகமாக செய்யப்பட்டிருக்கும். சாய்ந்தபடி அமருவதற்கு ஏற்ற சீட், டி.வி., சௌகரியமான பெட் வசதி என பார்த்து பார்த்து செய்யப்பட்ட இந்த ஒரு வேனின் விலை, ரூ.7 கோடியாம்! இந்த வேனுக்கு `வேனிட்டி வேன் ஃபால்கான்’ என்று அல்லு அர்ஜூன் பெயரிட்டிருக்கிறார்.

இதேபோல மணிக்கு 190 கி.மீ வேகத்தில் செல்லும் ஹம்மர் ஹெச்.2 கார் ஒன்றும் அல்லு அர்ஜூன் வைத்திருக்கிறார். 75 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த வாகனம், அல்லு அர்ஜூனின் ஷீட்டிங் ஸ்பாட் எல்லாவற்றிலும் இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் பயன்படுத்துவதற்கு எப்படி தனியாக வாகனம் இருக்கிறதோ, அதேபோல தனக்கென `ரேஞ்ச் ரோவர் வோக்’ கார் வைத்திருக்கிறார் Bunny. இந்த கார், ரூ 1.88 கோடி முதல் ரூ.4.03 கோடி வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்த காரில் 3 லிட்டர், வி6 டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 5 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் யூனிட் உள்ளது. தனது இந்த காருக்கு அவர் வைத்திருக்கும் பெயர், `பீஸ்ட்’. இதுவொரு பக்கமிருக்க, ரூ.31 லட்சம் மதிப்பிலான மெர்செடீஸ் 200 சி.டி.ஐ. காரொன்றை குடும்ப சுற்றுலா - லாங் ட்ரைவ் போன்றவற்றுக்கு பயன்படுத்துவதற்காகவே அல்லு அர்ஜூன் வாங்கி வைத்திருக்கிறார். இதற்கு `க்ரிம்ஸன் பீஸ்ட்’ என பெயர் வைத்திருக்கிறார் நம்ம Bunny!

வாகனங்களில் இவ்வளவு கவனம் செலுத்தும் அல்லு அர்ஜூனுக்கு, வீட்டுக்குள்ளேயே தனியே நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு உயர்தர வசதிகள் கொண்ட பிரம்மாண்ட வீடொன்று, ஹைதரபாத்தில் உள்ளது. ஹைதரபாத்திலுள்ள செலிபிரிட்டிகளின் வீடுகளிலேயே, மிக ஆடம்பரமான வீடாக இன்றளவும் இருப்பது இதுதான். இந்த வீடு, அல்லு அர்ஜூனுக்கு அவரது தந்தை பரிசாக அளித்ததாம். அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த், தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளர். பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர்தான் தனது மகன் அல்லு அர்ஜூனையும் திரைத்துறைக்கு ஸ்டைலிஷ் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

தனது சமீபத்திய பேட்டியில் தன் தந்தையை குறிப்பிட்டு பேசிய அல்லு அர்ஜூன், “என் தந்தை தான் என்னை வைத்து முதல் படம் தயாரித்து அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இப்போது வரை 20 படங்களில் நடித்து விட்டேன். இதில் சில படங்கள் அவருடன் இணைந்து வெற்றியும் கொடுத்திருக்கிறேன்.. தோல்வியும் கொடுத்து இருக்கிறேன்.. ஆனால் என் வீட்டில் ஒருநாள்கூட அவருக்கு நான் இதுவரை நன்றி சொன்னதே கிடையாது.. இப்போது முதல்முறையாக இங்கே அவருக்கு நன்றி சொல்கிறேன். என்னதான் அவர் என் தந்தையாக இருந்தாலும்கூட, படம் - தயாரிப்பு தொடர்பான விஷயத்தில் அவர் எப்பவுமே ஸ்ட்ரிக்ட்தான். படமென்று வந்துவிட்டால், என்னை ஒரு நடிகனாக மட்டுமே பார்ப்பார். அதுதான் எங்கள் இருவரையும் இன்றுவரை சிறந்த மனிதர்களாக வைத்திருக்கிறது” என உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.

தந்தையின் வழியில், இப்போது அல்லு அர்ஜூனும் தனது மகள் அல்லு அர்ஹாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்த உள்ளார். ஆம், சமந்தாவின் அடுத்ததிரைப்படமான `சகுந்தலம்’ படத்தில், அர்ஹா நடிக்கிறார். பிள்ளைகள் விஷயத்தில் எப்படி கவனம் கொள்வோரோ... அதேபோலத்தான் மனைவி விஷயத்திலும். இதற்கு சிறந்த உதாரணம், அல்லு அர்ஜூனின் இன்ஸ்டா பேஜ். இன்ஸ்டாவில் சுமார் 17.7 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட அல்லு அர்ஜூன், ஒரேயொருவரைத்தான் தான் ஃபாலோ செய்கிறார். அந்த ஒருவர், அவருடைய மனைவி ஸ்னேகா! இதைக் குறிப்பிட்டு வைத்து சமீபத்தில் மீம்ஸ்கள் பல ட்ரெண்டான சம்பவங்களும் நடந்தது.

குடும்பம், பிள்ளைகள் தொடங்கி தன் பெர்சனல் டைம் வரை எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செதுக்கிக்கொள்ளும் நம்ம ஸ்டைலிஷ் ஸ்டார் மேன்மேலும் வளர எங்கள் சார்பிலும் உங்களுக்கு வாழ்த்துக்கள் Bunny! அப்றம்... இன்னொரு விஷயம்... பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்டைலிஷ் ஸ்டார்! 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com