’சித்தாரே ஸமீன் பர்'..... படம் எப்படி இருக்கு!
sittaare zameen par(3.5 / 5)
கூடைப்பந்து அணியின் அசிஸ்டெண்ட் கோச் குல்ஷன் (ஆமீர்கான்). ஒரு வாக்குவாதம் முற்றி தன்னுடைய சீனியர் கோச்சை அடித்துவிடுகிறார். அதனால், வேலை பறிபோகிறது. அன்று இரவே குடித்துவிட்டு போலீஸ் வண்டி மீதே மோதி விபத்து ஏற்படுத்தியதால், வித்தியாசமான தண்டனை ஒன்றை கொடுக்கிறது நீதிமன்றம். சர்வோதயா அமைப்பில் இருக்கும் Down syndrome கொண்ட ஒரு கூடைப்பந்து அணிக்கு பயிற்சியாளராக மூன்று மாதங்கள் பணியாற்ற வேண்டும். வேறு வழியில்லாமல், இதற்கு ஒப்புக்கொள்ளும் குல்ஷன், அந்த அணிக்கு வேண்டா வெறுப்பாக பயிற்சி அளிக்க துவங்குகிறார். இன்னொரு புறம் மனைவி சுனிதாவுடன் (ஜெனிலியா) ஒரு கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார். எனவே குல்ஷனின் தொழில் வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையில் அன்பு எவ்வளவு முக்கியம் என எப்படி புரிந்து கொள்கிறார் என்பதே`சித்தாரே ஸமீன் பர்' படத்தின் மீதிக்கதை.
2018ல் வெளியான Champions என்ற ஸ்பானிஷ் படத்தின் இந்தி ரீமேக்தான் இப்படம். ஆனாலும் அந்தப் படத்தில் அழுத்தமாக பேசப்பட்ட எல்லா விஷயங்களிலும், சற்று இந்திய தன்மை சேர்த்து நமக்கு பரிமாறியிருக்கிறார் இயக்குநர் ஆர் எஸ் பிரசன்னா. மேலோட்டமாக பார்த்தால் இது ஜாலியான ஒரு பொழுதுபோக்குப் படமாக தெரியலாம். ஆனால் மனநலம் சார்ந்த சவால்கள் உள்ளவர்கள், பிறப்பால் ஏற்படும் குறைபாடுகளை எதிர்கொள்பவர்களை நாம் எவ்வளவு எளிதாக பைத்தியம் என சொல்லி ஒதுக்கி வைக்கிறோம், அவர்களின் அக உலகத்தை அறிய முற்படாத நமது முரட்டு பிடிவாதத்தை கேள்வி கேட்கிறது படம். நம் அனைவருக்குமான பிரதிநிதியாய் ஆமீரின் கதாப்பாத்திரம் முன்வைக்கப்பட்டு இவற்றை சொல்வது பெரிய ப்ளஸ்.
நடிப்பு பொறுத்தவரை ஆமீர்கான் அட்டகாசம் செய்திருக்கிறார். தயக்கத்தோடு கற்றுத்தர வருவது, பின் அந்த இளைஞ்சர்களுடன் மெல்ல மெல்ல நண்பனாவது, மனைவியிடம் கலங்கிப் போய் பேசுவது எனப் பல காட்சிகளில் நம்மை கலங்க வைக்கிறார்.ஜெனிலியாவுக்கு இது ஒரு க்யூட்டான காம்பேக். ஆமீர்கானின் தவறுகளை சுட்டிக்காட்டும் மனைவியாக, அவரிடம் செல்லமாக கோபித்துக் கொள்ளும் காதலியாக, தன்னுடைய உணர்வுகளை புரிய வைக்க பேசும் பெண்ணாக என ஒவ்வொரு உணர்வையும் அழகாக வெளிப்படுத்துகிறார். ஆமீர்கானின் அம்மாவாக வரும் டோலி அல்லுவால்யா, சர்வோதயாவின் பொறுப்பாளராக வரும் குர்பால் சிங், நீதிபதியாக வரும் தரானா ராஜா, சீனியர் கோச்சாக வரும் தீப்ராஜ் ராணா எனப் பலருக்கும் சின்ன சின்ன ரோல் என்றாலும் மனதில் நிற்கும் நடிப்பை கொடுக்கிறார்கள். விளையாட்டு வீரர்களாக வரும் அத்தனை பேரின் நடிப்பும் படத்தின் க்யூட் மீட்டரை எகிற வைக்கிறது. அதிலும் கோலு கான் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சிம்ரன் மங்கேஷ்கர் வெகு சிறப்பு.
ஜானராக இது ஒரு ஸ்போர்ட்ஸ் காமெடி படம் என கூறலாம். ஆனால் இது விளையாட்டை பற்றியது அல்ல, இவர்கள் நார்மல் இல்லை என நாம் யாரை ஒதுக்கி வைக்கிறோமோ, யாரிடம் இருந்து விலகி ஓடுகிறோமோ, அவர்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய தேவையை கூறும் படம். படத்தில் சில அழுத்தமானா இடங்களும் உண்டு. ஒரு காட்சியில் கோலு கதாப்பாத்திரம் "நாம் இங்கு வெற்றி பெற வந்துள்ளோம், யாரையம் அவமானப்படுத்த அல்ல" எனக் கூறும் காட்சி அத்தனை அழகு. அதே போல பல காமெடி வசனங்களும் மிக அழகாக இருந்தது.
இப்படம் என்னதான் கற்பனைக் கதையாக இருந்தாலும், கதையுடன் நம்மால் ஒன்றி போக முடிய காரணம், ஆமீர்கான் நடித்துள்ள குல்ஷன் பாத்திரம். ஆரம்பத்தில் அவர்களை பைத்தியம் எனக் கூறும் குல்ஷன், மெல்ல மெல்ல அவர்களை புரிந்து கொள்ள ஆரம்பிப்பார். அதன் பிறகும் ஒருகட்டத்தில் சுனிதாவிடம் அவர் சொல்லும் ஒரு விஷயத்தின் மூலம் குல்ஷன் இன்னும் முழுமையாக மாறவில்லை. ஒரு சராசரி மனிதன் போலத்தான் இருக்கிறார் எனக் காட்டும். அதே குல்ஷனிடம், சுனில் கதாப்பாத்திரம் "கண்டிப்பாக என்னை போல் ஒரு குழந்தையை நானும் விரும்பமாட்டேன்.
ஆனால் என்னை போன்ற ஒரு குழந்தைக்கு உங்களை போன்ற தந்தை கண்டிப்பாக இருக்க வேண்டும்" எனச் சொல்லும் இடம் நெகிழ்ச்சி பொங்கும் தருணம். கூடவே தங்களுக்குள்ளான பிரச்சனைகளை பேசும் குல்ஷன் - சுனிதா உரையாடல், குல்ஷனின் அம்மா உடன் ஹோட்டலில் நிகழும் உரையாடல் என அத்தனையும் வெகு சிறப்பு.
இந்தப் படத்தின் குறை என சொல்ல வேண்டும் என்றால், படத்தை இன்னும் கொஞ்சம் சுருக்கமாக கொடுத்து இருந்தால், அவ்வப்போது வரும் சலிப்பு குறைந்திருக்கும். ஆனால் இத்தனை அழகும், நெகிச்சி தருணங்களும் நிறைந்திருக்கும் படத்தில், அது ஒரு பெரிய குறையாக தெரியவில்லை. நிச்சயம் குடும்பத்துடன் கண்டு, சிரித்து, மகிழ்ந்து, நெகிழ வேண்டிய ஒரு படம்.
சித்தாரே ஸமீன் பர் என்றால் Superstars on Earth என்று பொருள். இப்படியான படைப்பை கொண்டு வந்திருக்கும் ஆமீர்கான் மற்றும் குழுவினர் அத்தனை பேரும் சூப்பர்ஸ்டார்கள்தான்.