”அன்பைக் கொண்டாடுகிறோம்”: திருமணத்திற்குப்பின் நெகிழ்ச்சி பதிவிட்ட ஆதி-நிக்கி கல்ராணி
தங்கள் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர் ஆதி- நிக்கி கல்யாணி ஜோடி.
நடிகர் ஆதியும் நிக்கி கல்ராணியும் ‘மரகத நாணயம்’, ‘யாகாவாராயினும் நா காக்க’ ஆகிய இரண்டுப் படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அப்போதே ஆதியின் ‘டார்லிங்’ ஆனார் நிக்கி கல்ராணி. இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நிக்கி கல்ராணி மற்றும் ஆதி, தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்தனர்.
இவர்களின் திருமணத்தையொட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் ‘ஏ.கே.61’ படப்பிடிப்பில் நடிகர் அஜித்தை நேரடியாக சந்தித்து நடிகர் ஆதி திருமண அழைப்பிதழை கொடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் நேற்று சென்னையில் பிரபல ஓட்டல் ஒன்றில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஆதியும் நிக்கி கல்ராணியும் தங்கள் சமூக வலைதளங்களில் ”அன்பை கொண்டாடுகிறோம். எங்கள் நலம் விரும்பிகள் அனைவரின் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டது உண்மையிலேயே நாங்கள் என்றென்றும் போற்றக்கூடிய ஒரு தருணம். இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாக மேற்கொள்ளும்போது உங்கள் ஆசீர்வாதத்தையும் அன்பையும் தேடுகிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.