”மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கிறாரா?”- விக்ரம் மேனேஜர் விளக்கம்
மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக விக்ரமின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.
’மகான்’ படத்தினைத் தொடர்ந்து ‘கோப்ரா’, ‘துருவ நட்சத்திரம்’ படங்கள் அடுத்தடுத்து விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘விக்ரம் 61’ படத்தில் நடிக்கும் விக்ரம் அடுத்ததாக, தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
’கீதா கோவிந்தம்’ இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் தற்போது ’சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து முடித்திருக்கும் மகேஷ் பாபு அடுத்ததாக சூப்பர் ஹிட் அடித்த அல்லு அர்ஜுனின் ‘அலாவைகுந்தபுரம்லோ’ படத்தின் இயக்குநரும், ‘ஐயப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கின் ‘பீமா நாயக்’ படத்தின் திரைக்கதை ஆசிரியருமான த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில்தான், நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.
ஆனால், அந்தத் தகவலை மறுத்து இந்த வதந்திகளுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்துள்ளார் விக்ரமின் மேனேஜர் சூர்யநாராயணன். அவரது ட்விட்டர் பதிவில், “நடிகர் விக்ரம் மகேஷ் பாபுவுடன் எந்தப் படத்திலும் இணையவில்லை. அவருடன் நடிப்பதாக சொல்லப்படுபவை ஆதாரமற்ற வதந்திகள்” என்று தெரிவித்துள்ளார்.