ஹர்பஜன் சிங்கிற்கு நண்பன் ஆகிறார் அர்ஜூன்? - ‘பிரண்ட்ஷிப்’ பட அப்டேட்

ஹர்பஜன் சிங்கிற்கு நண்பன் ஆகிறார் அர்ஜூன்? - ‘பிரண்ட்ஷிப்’ பட அப்டேட்
ஹர்பஜன் சிங்கிற்கு நண்பன் ஆகிறார் அர்ஜூன்? - ‘பிரண்ட்ஷிப்’ பட அப்டேட்

ஹர்பஜன் சிங்கின் நண்பராக நடிகர் அர்ஜூன் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் தொடர்ந்து வெளியிடும் தமிழ் ட்விட்டர் பதிவுகள் மூலம் அதிகம் பிரபலமானார். சென்னைத் தமிழ், செந்தமிழ் என ஹர்பஜன் சிங் மாற்றி மாற்றி பதிவிடும் ட்வீட்களால் ‘தமிழ்ப் புலவர்’ என அவரைத் தமிழ் ரசிகர்கள் செல்லமாக குறிப்பிடத் தொடங்கினர்.

ஹர்பஜன் சிங், நடிகர் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். வெப் சீரிஸ் ஒன்றில் நவீன திருவள்ளுவர் ஆகவும் நடித்து வரும் ஹர்பஜன் சிங், அதனை அடுத்து தமிழ் சினிமாவில் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூரியா ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்க உள்ளனர்.

இந்தப் படத்தில் ஹர்பஜன் நடிப்பது தொடர்பாக அப்படத்தின் இயக்குநர் ஜான் பவுல் ராஜ் ஏற்கெனவே சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார். இது குறித்து அவர் பேசும்போது, “இந்தக் கதை ஒரு மலையாள திரைப்படத்தின் பாதிப்பில் இருந்து உருவானது. ஹர்பஜனை பார்த்து நான் மும்பையில் கதை சொன்னேன். அவருக்கு பஞ்சாபி மற்றும் இந்தியில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவர் தமிழில் நாயகனாக நடிக்கவே விரும்பினார். இந்தப் படம் கிரிக்கெட், மாணவர்களுக்கான அரசியல் மற்றும் பெண்களின் முன்னேற்றம் தொடர்பானதாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஹர்பஜனுடன் சேர்ந்து நடிகர் அர்ஜுன் நடிக்க இருக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் ஆகியோர் இந்தப் படத்தில் நண்பர்களாக நடிப்பார்கள் என்று தெரிகிறது. சினிமாஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்தப் படத்தை சீன்டோவா பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு மத்தியில் இதனை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com