பாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். -  ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.

பாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.

பாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.
Published on

வழக்கமாக கமர்ஸியல் படங்களில் லாஜிக் மீறல்களை கண்டுகொள்ள வேண்டியது இல்லை, என்றாலும் லாஜிக்கை மீறுவதில் ஒரு லாஜிக் வேண்டாமா....?

கர்னல் சுபாஷாக நடித்திருக்கும் விஷாலின் அப்பா பழ.கருப்பையா இப்படத்தில் தமிழக முதல்வர். விஷாலின் அண்ணன் ராம்கி துணை முதல்வர். முதல்வர் கருப்பையாவின் கட்சி ஏற்பாடு செய்த அரசியல் கூட்டத்திற்காக தமிழகம் வரும் தேசியத் தலைவர் ஒருவர் குண்டு வைத்து கொல்லப்படுகிறார். அதனைத் தொடர்ந்து ராம்கியும் இறந்து போகிறார். இதைச் செய்தவர்கள் பற்றி துப்பு கிடைக்க அவர்களைத் தேடி லண்டன், இஸ்தான்பூல், பாகிஸ்தான் என பயணிக்கும் ஹீரோ சர்வதேச குற்றவாளியான மாலிக்கை என்ன செய்தார்...? என்பது தான் கதை.

தமிழ் சினிமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை இதுவரை அச்சுறுத்தி வந்த நடிகர் விஜயகாந்த் கலைவாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தமிழகத்தில் அந்த தலைமைக்கான வெற்றிடம் காலியாக இருந்தது. தற்போது விஜயகாந்த்தின் இடத்தை விஷால் பிடித்திருக்கிறார் என்பது போல் நிச்சயம் படம் பார்ப்பவர்களுக்கு தோன்றும்.  விஜயகாந்த் தீவிரவாதிகளை பிடிப்பதோடு நிறுத்திக் கொள்ளவார், ஆனால் விஷால் ஒரு படி மேலே போய் பாகிஸ்தான் ராணுவ ஜெனரலையே ஒரு காட்டு காட்டுகிறார்.

கோவை குண்டு வெடிப்பு, மும்பை தாக்குதல் என இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்பு மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய மாலிக் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார். அவரை பிடிக்க தனி நபராக போராடும் ஹீரோவுக்கு தமன்னா, யோகிபாபு என பலரும் உதவுகிறார்கள். இண்டர் நேசனல் பெண் குற்றவாளியாக வரும் அகன்யா புரியின் நடிப்பு ஆசம். சண்டைக்காட்சிகளில் டட்லியின் கேமரா ஜெட்லி வேகத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறது. உண்மையில் துருக்கி லண்டன் பாகிஸ்தான் இந்நிலப்பரப்புகளை ரொம்பவே அழகாக படமாக்கியிருக்கிறார்  டட்லி. நூறு ரூபாயில் உலகத்தை சுற்றிப் பார்க்க விரும்புகிறவர்கள் தவறவிடக் கூடாத படம்...,

முதல் முப்பது நிமிட தொய்வை சற்றே சோர்வின்றி கடந்துவிட்டால் அடுத்து வரும் இரண்டு மணி நேரமும்., அருமையான ஆக்‌ஷன் மசாலா விருந்துக்கு கியாரண்டி உண்டு.., ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் பாடல்கள் மனதை தொடவில்லை., ஆனால் சுந்தர் சி படமா இது என ஆச்சர்யப்படும் அளவிற்கு தன்னால் எல்லா ஜானர்களையும் தொடமுடியும் என நிரூபித்திருக்கிறார் அவர்., திரைக்கதை வெவ்வேறு நிலப்பரப்புகளுக்கு பயணித்துக் கொண்டே இருப்பதால் ரசிகர்கள் சோர்வின்றி படத்தை ரசிக்கலாம்.

இடைவேளை காட்சியில் விஷாலும், அகன்யா புரியும் மோதிக் கொள்ளும் ச்சேசிங் காட்சி விஷாலின் ஆக்ஷன் இமேஜை மேலும் உயர்த்துகிறது. அறிமுக நாயகி ஐஸ்வர்யா லக்ஸ்மி முதல் படத்திலேயே நெஞ்சில் நிற்கும் அளவிற்கு தன்னுடைய கதாபாத்திரை கச்சிதமாக செய்துள்ளார். தமன்னா பெரிதாக பயன்படுத்தப்படவில்லை என்றாலும், அவருக்கு படத்தில் ராணுவ அதிகாரியாக வித்தியாசமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. யோகிபாபு, ஷாரா இருவரும் இந்தப் படத்திலும் நகைச்சுவை செய்ய முயற்சி மட்டுமே செய்திருக்கிறார்கள். இரட்டை ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் பிரமாதமாக தன் வேலையை செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் டட்லியும், அன்பறிவும் தான் படத்தின் முழு பலம்.

இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு உதவும் தீவிரவாதியாக மட்டுமே சுருக்கிப் பார்ப்பதை சுந்தர் சி’யும் செய்திருக்கிறார் என்பது கண்டிக்கத்தக்கது. மற்றபடி எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி குடும்பத்தோடு சென்று பார்க்க முடிந்த சுமார் ரக மாசாலாப் படம் தான் ‘ஆக்ஷன்’.

வீடியோ :

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com