\
Acter Manikandan K Acts Makkal Kaavalan Movie Updates
Makkal Kaavalaninsta

கே.மணிகண்டனின் ஆக்‌ஷன் படம்.. 'மக்கள் காவலன்' - வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி- அவரது பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

'குட் நைட்', 'லவ்வர்', 'குடும்பஸ்தன்' ஆகிய திரைப்படங்களின் வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து கே. மணிகண்டன் நடிக்கும் திரைப்படம் 'மக்கள் காவலன்'. அவரின் தொடர் வெற்றிகள் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவரை உயர்த்தியுள்ளது. 'மக்கள் காவலன்' படத்தின் மூலம் மணிகண்டன் முதன்முறையாக ஓர் அதிரடியான ஆக்‌ஷன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் கே. மணிகண்டன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர் .கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன்,  உன்னி மாயா,  திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி,  ரகு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'பைசன் காளமாடன்' படத்திற்கு பிறகு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி, இயக்கியிருக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படம் - கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் கதையை உரக்கப் பேசுகிறது. ஆனால், ஊழல் நிறைந்த ஓர் அமைப்பு... அவரைச் சரணடைவது அல்லது எதிர்த்துப் போராடுவது என்ற இரண்டு தேர்வுகளுக்குள் உந்தித் தள்ளுகிறது. ஒரு தனி மனிதனின் உயிர் வாழ்வதற்கான போராட்டமாகத் தொடங்கும் இது... மிகப்பெரிய பரிமாணத்தை எட்டுகிறது. இதனால் அவர் ஒருபோதும் விரும்பாத... ஒரு தலைவராக மாறவேண்டிய கட்டாயச் சூழல் உருவாகிறது. போராட்டம் தீவிரம் அடையும்போது.. அதற்கான விலையும் அதிகரிக்கிறது.

அதே சமயத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கும், மக்களின் காவலனுக்கும் இடையிலான எல்லை மறைய தொடங்குகிறது. தனது பிறப்புச் சூழலோ... அல்லது தன்னைச் சுற்றியுள்ள தடைகளோ... தனது லட்சியத்தின் எல்லையைத் தீர்மானிக்க அனுமதிக்காத ஒரு மனிதனின் கதையே.. இப்படத்தின் மையப் பொருளாகும். உலகம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால் கனவு காணும் துணிச்சலையும்... அந்த எல்லைகள் முக்கியத்துவமற்றதாக மாறும்வரை தொடர்ந்து முன்னேறும் மன உறுதியையும்... இத்திரைப்படம் அழுத்தமாகப் பேசுகிறது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம்  4ஆம்  தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com