’காலா’ படப்பிடிப்பில் விபத்து: வில்லன் நடிகருக்கு எலும்பு முறிவு!
ரஜினிகாந்த் நடிக்கும் ’காலா’ படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில், வில்லன் நடிகர் அருள்தாஸுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
நான் மகான் அல்ல, நீர்ப்பறவை, சூது கவ்வும் உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர், அருள்தாஸ். ரஜினிகாந்த் நடிக்கும் ’காலா’ படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே அமைக்கப்பட்டுள்ள, மும்பை தாராவி செட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த படப்பிடிப்பில், ரஜினிகாந்த் முன்னிலையில் அருள்தாஸ் மற்றும் குழுவினர் பேசிக்கொண்டிருப்பது போலவும் ஜீப் ஒன்று வேகமாக வருவது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது வேகமாக வந்த ஜீப், அருள்தாஸ் மீது மோதியது. அவரது இடது காலில் ஜீப்பின் டயர் ஏறி இறங்கியது. இதில் அவரது 3 விரல்கள் நசுங்கின. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வலியால் துடித்த அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. மாவுக்கட்டு போடப்பட்டதையடுத்து 3 வாரங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.