தியேட்டரில் மீண்டும் வெளியாகும் 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்'!
இயக்குநர் செல்வராகவனின் ’புதுப்பேட்டை’, ’ஆயிரத்தில் ஒருவன்’ படங்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவுள்ளன.
தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கிய 'புதுப்பேட்டை' கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியானது. காலங்காலமாக ரெளடிகள் என்றாலே உடல் வலுமிக்கவர்களாக இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்து ஒல்லியான தனுஷை ரெளடி கெட்டப்பில் நடிக்க வைத்திருந்தார்.
தனுஷும் கொக்கி குமாராக மிரட்டலான நடிப்பில் தெறிக்கவிட்டார். தனுஷ், செல்வராகவனுக்கு இரண்டு பேருக்குமே முக்கியமான படம். அதேபோல, கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று. மன்னர்கள் என்றாலே பளீரென இருப்பார்கள் என்று காட்சியமைக்கப்பட்ட நிலையில், கருப்பு நிறத்தில் பார்த்திபனை மன்னராக காட்டியது சினிமா விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்தது. இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக வெற்றி பெற்றன.
இந்நிலையில், வரும் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 ஆம் தேதி மீண்டும் ’புதுப்பேட்டை’ மற்றும் ’ஆயிரத்தில் ஒருவன்’ படங்கள் மல்டிஃப்ளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகவிருக்கின்றன என்ற அறிவிப்பு தனுஷ், கார்த்தி, செல்வராகவன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.