
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் நடிக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தான் அவர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில், பாதிப்புக்கு உதவும் வகையில் செலிபிரிட்டிகள் பலரும், நிறுவனங்கள் பலவும் நிதி திரட்ட முன்வந்துள்ளன. அதன்படி, இதனால் கிடைக்கும் வருமானத்தை தேவைப்படும் மக்களுக்கு நன்கொடையாக வழங்க முடியும் என்பதால் பல பிரபலங்களை கொண்டு இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்படும் சதுரங்க விளையாட்டைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உதவிடும் வகையில் 'செக்மேட் COVID' என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது தனியார் அமைப்பான செஸ்.காம்.
ஜூன் 13-ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் டாப் செலிபிரிட்டிகள் ஐந்து முறை உலக சாம்பியனும், இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்திற்கு எதிராக அரை மணி நேரம் விளையாடினர். இவர்களில் முக்கியமானவர் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான். ஆன்லைன் மூலமாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்கானிடம், சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
``மல்யுத்த விளையாட்டை மையடுத்தி நீங்கள் நடித்தது போல், சதுரங்கத்தை மையப்படுத்தி, விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் நீங்கள் நடிப்பீர்களா" என்று கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் கொடுத்த அமீர்கான், ``அப்படி ஒன்று நடந்தால் நிச்சயம் நடிப்பேன். அவர் பயோபிக்கில் நடிப்பது எனக்கு கிடைத்த கெளரவம். எனவே அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். ஆனால், அதில் நடிக்கும் முன்பு, ஆனந்தின் எண்ணங்களை நான் உள்வாங்கி கொள்வேன். அது கதாபாத்திரத்துக்கு வலுசேர்ப்பதோடு, எனக்கும் உற்சாகத்தை தரும். இதெல்லாம் நடக்கும் வேளையில் நிச்சயம் அவருடனும், அவரின் குடும்பத்துடனும் நீண்ட நேரம் செலவிடுவேன். அதன்பின்பே அவரின் கேரக்டரில் நடிப்பேன். இப்படி ஒரு விஷயம் நடக்க வேண்டும் என ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
நடிகர் அமீர்கான் சதுரங்க விளையாட்டை அதிகம் விரும்புபவர். அவருடன் படங்களில் பணிபுரிந்த துணை நடிகர்கள் பலரும் பட ஷூட்டிங்கின் இடைவேளையில் செஸ் விளையாடியதை மீடியாக்களில் வெளிப்படுத்தியுள்ளனர். அப்போது இருந்தே செஸ் விளையாட்டு மீதான அமீர்கானின் ஆர்வத்தை புரிந்துகொள்ள முடிந்தது.
மேலும், ஏற்கெனவே கடந்த காலங்களில் விஸ்வநாதன் ஆனந்த் உடன் அமீர்கான் விளையாடி இருந்த நிலையில், தற்போது அவர் கேரக்டரில் நடிக்க ஆர்வம் காட்டியிருப்பது பாலிவுட் இயக்குநர்களுக்கு மீண்டும் ஒரு பயோபிக்கில் நடிக்க, அமீர் ரெடி என்பதை கிரீன் சிக்னல் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.