”எனக்கு அடையாளம் தந்த பாலா அண்ணனுடன் மீண்டும் ஒரு பயணம்” - சூர்யா
”ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர் பாலா” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.
நேற்று நடிகர் சிவக்குமார் தனது 80 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு, சூர்யா, ஜோதிகா,கார்த்தி, கலைஞானம் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், இயக்குநர் பாலாவும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சூர்யா, பாலா, சிவக்குமார் மூவரும் புன்னகையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள சூர்யா,
”என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா. 2டி எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் பாலா இயக்கும் படத்தில் அதர்வா முரளி நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.