தேவாவின் இறுதி நிமிடங்களில் நடந்த நெகிழவைத்த சம்பவம்! ஸ்ரீகாந்த் தேவா பகிர்வு!
தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா, தந்தையின் இறுதி நிமிடங்கள் மற்றும் நினைவுகளை பகிர்ந்தார். மருத்துவ ஊழியர்கள் தேவா சாரின் பெருமையை மதித்து, மருத்துவ செலவுகளை வேண்டாம் என மறுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைந்து ஒரு மாதம் கடந்தாலும், அந்த தாக்கம் இன்னும் குறையவே இல்லை. இந்நிலையில் அவரது மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா தனது தந்தையின் நினைவுகள் பற்றியும் இறுதி நிமிடங்கள் பற்றியும் சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அப்பாவுக்கு தேசியவிருது வாங்க வேண்டும் என்பது பெரிய கனவு. எனக்கு அது சின்ன வயதில் இருந்தே தெரியும். எனக்கு தேசிய விருது கிடைத்த போது அவரே வாங்கியது போல இருக்கிறது என்று மகிழ்ந்தார். அந்த விருது வந்ததும் சிறப்பான ஃபிரேம் போட்டு வைக்க வேண்டும் எனக் கூறினார். அதன்படி விலையுயர்ந்த ஃபிரேம் போட்டுவிட்டேன். அதை அவர் ஒரு இடத்தில் மாட்ட சொன்னார். ஆனால் நான் வேண்டாம் என கூறிவிட்டேன். அடுத்த நாள் தன் உதவியாளரிடம் அப்பா கேட்கையில் நான் வேண்டாம் என சொன்னதை கூறி இருக்கிறார். உடனே என்னிடம் அது குறித்து கேட்டார், இல்லை உங்கள் நண்பர்கள் இங்கு வரும் போது விருதை பார்த்து எப்போது தேசிய விருது வாங்கினீர்கள் எனக் கேட்பார்கள். நான் வாங்கவில்லை என் மகனுடையது என நீங்களும் மகிழ்ச்சியாக தான் கூறுவீர்கள். ஆனால் அடுத்து அவர்கள் நீங்க வாங்கவில்லையா என கேட்பார்கள், அது தேவை இல்லாத சங்கடத்தை கொடுக்கும். அந்த உடையாடலே வேண்டாம் என அந்த விருதை அப்பாவின் அறையிலேயே வைத்துவிட்டேன்.
அப்பா பொறுத்தவரை பிறரது மருத்துவ செலவுகள் என வந்தால் உடனே உதவுவார். அவரை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் போது எனக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லை. அப்பாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸை அழைத்தோம். ஆனாலும் விரைவாக செல்ல வேண்டும் என அப்பாவை தூக்கிக்கொண்டு படிக்கட்டுகளில் ஓடினேன். அப்பாவை ஹாஸ்பிட்டல்ல சேர்க்கும் போது அங்க CPR பண்ணாங்க, ஆனாலும் காப்பாத்த முடியல, இருந்தாலும் ஹாஸ்பிடல் வந்துட்டோம், எவ்ளோ BILடன்னு கேட்டேன். அதுக்கு அந்த டாக்டர் ’சார் அவர் எவ்ளோ பெரிய லெஜண்ட், அவருக்கு போய் காசா, முடிஞ்சா கொண்டு போற ஆம்புலன்ஸ்க்கு மட்டும் காசு கொடுத்துடுங்க’னு சொன்னாங்க. அவங்க கிட்ட கேட்டா அவங்களும் 'சார் தேவா சார் பாட்ட கேட்டு தான் சார் நாங்க வண்டியே ஓட்டுவோம், அவருக்கு போய் காசா, வேணாம் சார்'னு சொன்னாங்க.
அப்பாவின் பிறந்தநாள் நவம்பர் 20. அன்று அப்பாவுக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். இதில் அப்பா படத்தை திறக்க யாரை அழைக்கலாம் என யோசித்தோம். இசைத்துறையில் உள்ள ஆளுமை தான் சரியாக இருக்கும் என நினைத்த போது, அப்பாவே சொன்னது போல எனக்கு இளையராஜா சாரை அழைக்கலாம் என தோன்றியது. ஆனால் அவர் வருவாரா மாட்டாரா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவர் free ஆக இருந்தால் வந்து விடுகிறேன் என சொன்னார். அதேபோல வந்துவிட்டார். இந்த நேரத்தில் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு, வந்திருந்த அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

