அவருடைய உலகம் என்றும் அலாதியானது..! செல்வராகவனின் படைப்புகள் ஒரு பார்வை

அவருடைய உலகம் என்றும் அலாதியானது..! செல்வராகவனின் படைப்புகள் ஒரு பார்வை

அவருடைய உலகம் என்றும் அலாதியானது..! செல்வராகவனின் படைப்புகள் ஒரு பார்வை
Published on

கோலிவுட் சினிமாவின் செலிபிரிட்டி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரை தமிழ் சினிமாவின் ‘GOD OF FANTASY” என சொல்லலாம். கற்பனைக்கு எள்ளளவும் பஞ்சமில்லாதவர். வசனங்களை ராவாக எழுதுவதில் வல்லவர். சிறந்த கதாசிரியரும் கூட. சினிமா துறைக்குள் கதாசிரியராக எண்ட்ரி கொடுத்து யூத்களின் எவர்கிரீன் இயக்குனராக உருவெடுத்த செல்வராகவன் இப்போது நடிகராகவும் அரிதாரம் பூசியுள்ளார். இவரது திரைப்படைப்புகள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யும் போதெல்லாம் ரசிகர்கள் அதை கொண்டாடி தீர்ப்பதுண்டு. அதற்கு உதாரணமாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை மேற்கோள் காட்டலாம். 

பொறியியல் பட்டதாரியான செல்வராகவனுக்கு தன் மனதுக்கு பிடித்த வேலையை செய்யவேண்டுமென்ற ஆர்வம். அது, இது என பல வேலைகளை செய்து பார்த்த அவருக்கு சினிமா துறையின் மீது ஆர்வம் வந்துள்ளது. படித்து முடித்த கையேடு தனது கதைகளை தயாரிப்பாளர்களிடம் சொல்லும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் அவை அனைத்தும் தோல்வியை தழுவியுள்ளன. இருந்தாலும் விடா முயற்சியோடு முயற்சி செய்தார். இறுதியில் உருவானது தான் துள்ளுவதோ இளமை திரைப்படம். அந்த படத்திற்கான திரைக்கதையை எழுதியது செல்வராகவன் தான். இயக்கியது அவரது அப்பா கஸ்தூரி ராஜா. இதில் தான் தான் தனுஷ் அறிமுகமாகியிருந்தார். 

இந்த படம் வெளியாகி இளைஞர்களை அப்போது கவர்ந்திருந்தது. வெற்றிக்கு பிறகு அப்பாவுடன் இணைந்து இந்த படத்தை இயக்கியது நானும் தான் என செல்வராகவன் சொல்லியிருந்தார். படம் ஸ்லோ ஹிட் அடித்தது. 

காதல் கொண்டேன்

துள்ளுவதோ இளமை கொடுத்த சக்ஸஸ் காதல் கொண்டேன் உருவாக காரணமாக அமைந்தது. இந்த முறை அதிகாரப்பூர்வமாக செல்வராகவன் இயக்குனராக அறிவிக்கப்பட்டார். சைக்கோ - ரொமான்டிக் த்ரில்லர் ஜானரில் இந்த படம் வெளியாகி செக்கை போடு போட்டிருந்தது. செல்வராகவன் எழுதி, இயக்கியிருந்தார். நடிகை சோனியா அகர்வாலின் முதல் படம். தனுஷ் வினோத் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். ‘திவ்யா… திவ்யா…’ என சொல்லி தனுஷ் நடிப்பில் மிரட்டியிருந்தது பரவலாக பேசப்பட்டது. செல்வராகவன் மற்றும் தனுஷுக்கு பிரேக் கொடுத்த படமும் இது தான். 

7G ரெயின்போ காலனி

தன் கல்லூரி நாட்களின் நீங்கா நினைவுகளை இஸ்னபிரேஷனாக கொண்டு அதையே வைத்து கதை எழுதியுள்ளதாக 7G ரெயின்போ காலனி குறித்து சொல்லியிருந்தார் இயக்குனர் செல்வராகவன். பொதுவாக முதல் சில படங்களை மட்டுமே அதிகம் பரிச்சயமில்லாத நாயகர்களை வைத்து இயக்கும் இயக்குனர்கள் அடுத்தடுத்த படங்களில் சூப்பர் ஸ்டார்களை புக் செய்வதுண்டு. ஆனால் செல்வராகவன் அதில் கொஞ்சம் வித்தியாசமானவர். தன் படத்தில் வரும் கதிர் பக்கத்து வீட்டு பையன் என்பதை தெளிவுப்படுத்தும் நோக்கில் ரவிகிருஷ்ணாவை ஹீரோவாக்கினார். இந்த படத்திலும் சோனியா அகர்வால் தான் ஹீரோயின். பாடல்கள், கதை என அதிரிபுதிரி ஹிட் அடித்தது செல்வாவின் 7G.

புதுப்பேட்டை

கொஞ்சம் இடைவேளைக்கு பிறகு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. மீண்டும் தம்பி தனுஷுடன் கூட்டணி. வடசென்னை கேஸ்டெரின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து காட்சிப்படுத்தி இருப்பார் செல்வா. இதிலும் குமார் மூலம் செம்மையான செய்கை செய்திருப்பார். வசனகர்த்தா பாலகுமாரன் உடனான கூட்டணி படு சூப்பராக இருக்கும். ஒவ்வொன்றும் அக்மார்க் ரகம். நிகழ்கால அரசியலை எந்தவித சமரசமும்  இல்லாமல் படம் பிடித்திருப்பார் இயக்குனர் செல்வா. இப்போதும் கூட திரை ரசிகர்கள் புதுப்பேட்டை  2 எப்போது  என பிரியமாக கேட்பதுண்டு. 

ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேறு

சில கமிட்மென்டின் காரணமாக தெலுங்கு மொழி படத்தை இயக்கியிருந்தார் செல்வராகவன். இதில் வெங்கடேஷும், திரிஷாவும் பிரதான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கமர்ஷியலாக சக்ஸஸ் கொடுக்க தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என ரீமேக் ஆகியிருந்தது. 

ஆயிரத்தில் ஒருவன்

நிகழ் காலத்தில் சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையே உரிமைக்கான போர் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை தனது கற்பனை குதிரையை ஓடவிட்டு அழகாக படமாக்கி இருப்பார் செல்வராகவன். முதல் பிரேம் தொடங்கி கடைசி பிரேம் வரை செதுக்கி இருப்பார். முதல் பாதி முழுவதும் சோழர்கள் பதுங்கியுள்ள ரகசிய இடத்தை நோக்கியே நகரும் காட்சிகள் அது சார்ந்த முடிச்சுகளுமாக த்ரில் என்றால். இரண்டாம் பாதியில் நடிப்பால் ரசிகர்களை நாற்காலியில் நாடு கடத்தி இருப்பார் சோழ மன்னராக நடித்த பார்த்திபன். கிளைமாக்சில் சோழர்கள் வீழ்வது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதில் தூதுவனாக வரும் நடிகர் கார்த்தி சோழ இளவரசரை பாண்டியர்களிடமிருந்து பத்திரமாக மீட்டு செல்வது போல படம் முடியும். அது தான் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு முடிச்சு போட்டது. 

2010இல் வெளியான போது 181 நிமிடங்கள் ஓடும் படமாக வெளியானது.  இருப்பினும் பல எதிர்ப்பு மற்றும் சென்சார் சிக்கலினால் 154 நிமிடங்களாக குறைக்கப்பட்டது. சோழர்கள் காட்சி அமைப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு “அது என் கற்பனை” என சொல்லியிருந்தார் செல்வராகவன். இப்படியெல்லாம் பல தடைகளை கடந்து தான் ஆயிரத்தில் ஒருவன் இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில்  தனுஷ் நடிப்பது உறுதியாகி உள்ளது. 2024இல் இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்தில் ஒருவனுக்கு அடுத்தபடியாக செல்வராகவன் மயக்கம் என்ன படத்தை இயக்கியிருந்தார். ஒரு புகைப்படக் கலைஞனின் வலியை அந்தப்படம் விவரித்திருக்கும்.

இரண்டாம் உலகம்  

ஏழு கடல், ஏழு மலை என கதைகளில் சொல்லி கேட்டிருப்போம். அதில் முதல் மூன்றை இரண்டாம் உலகத்தின் மூலம் சொல்லியிருப்பார் செல்வராகவன். காதலுடன் ஒருவன் பூவுலகை விடுத்து வேற்றுலகம் செல்வது தான் கதை. அங்கு உயிர் நீத்த தன் காதலியை பார்ப்பான். அப்படியே அடுத்த உலகம் பயணிப்பான். இதை சொல்வது எளிது.  கண்முன்னே கலர்புல்லாக கொண்டு வந்திருப்பார். 

NGK

நடிகர் சூர்யா மாஸ் காட்டியிருந்த படம் இது. அரசியலையும் அதில் உள்ள சூழ்ச்சிகளையும் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருப்பர் செல்வா. தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் 2016இல் புரொடெக்ஷன் தொடங்கி இப்போது தான் வெளியாகியுள்ளது. இது செல்வராகவனின் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் என விமர்சனங்கள் வந்துள்ளன.

2017 ஆம் ஆண்டே செல்வராகவன் இயக்கி முடித்திருந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் 4 ஆண்டுகால தடையை தகர்த்து அவரது பிறந்தநாளான இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. 

-எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com