தமிழ்த் தயாரிப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்தார்: நடிகை ஸ்ருதி பரபரப்பு புகார்

தமிழ்த் தயாரிப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்தார்: நடிகை ஸ்ருதி பரபரப்பு புகார்
தமிழ்த் தயாரிப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்தார்: நடிகை ஸ்ருதி பரபரப்பு புகார்

தென்னிந்திய சினிமாவில் நடிகைகள் பாலியல் தொல்லைகளை அனுபவிப்பது உண்மைதான் என்று நடிகை, ஸ்ருதி ஹரிஹரன் கூறியுள்ளார். 

கன்னடத்தில் ’லூசியா’ என்ற படம் மூலம் கவனிக்கப்பட்டவர் நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இந்தப் படம் தமிழில் சித்தார்த் நடிப்பில் ’எனக்குள் ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருந்தது. ஸ்ருதி தமிழில், ’நெருங்கி வா முத்தமிடாதே’, ’நிபுணன்’, ‘சோலோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர், ’சினிமாவில் பாலியல் தொல்லை’ என்பது குறித்து பேசினார். 

அப்போது அவர் கூறும்போது, ‘தென்னிந்திய சினிமாவில் நடிகைகள் பாலியல் தொல்லைகளை அனுபவிப்பது உண்மைதான். வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். நான் நடித்த கன்னட படம் ஒன்று தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அந்தப் படத்தில் நடித்த கேரக்டரில் நடிக்க என்னை அணுகினார்கள். அழைத்தார்கள். சென்றேன். அவர்கள் சொன்னது அதிர்ச்சி அளித்தது. அவர்கள் வார்த்தையிலேயே சொல்வதென்றால், ‘நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து இந்தப் படத்தை தயாரிக்கிறோம். எப்போது தேவையோ, அப்போதெல்லாம் உங்களை பயன்படுத்திக் கொள்வோம். சம்மதிக்க வேண்டும்’ என்றனர். கோபத்தில், ' நான் எப்போதும் செருப்பை கையில் வைத்து நடமாடுபவள்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அப்போதிருந்து தமிழில் எனக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டன. இது ஒரு அனுபவம். 18 வயதில் சினிமாவுக்கு வந்தேன். முதல் படத்திலேயே மோசமான அனுபவம் ஏற்பட்டது. பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு அழுதபடியே, வீடு திரும்பினேன்’ என்றார். 

இவர் இப்படி கூறியிருப்பது, திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com