பிரித்திகா பாலியல் புகார் உண்மைக்கு புறம்பானது - நடிகர் தியாகராஜன்
பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண் புகைப்பட கலைஞர் பொய் கூறுகிறார் என நடிகர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் தியாகராஜன் மீது பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் பாலியல் புகார் தெரிவித்தார். மீடூ ஹேஷ்டேக்கில் பதிவிட்டுள்ள பிரித்திகா, 'பொன்னர் சங்கர்' படத்தில் பணியாற்றியபோது அப்படத்தை இயக்கிய நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தவறான முறையில் தன்னை அணுக முயன்றதாக தெரிவித்துள்ளார்.
ஆபாசமான வகையில் உள்ள புகைப்படங்களை தனக்கு அனுப்பியதாகவும், நள்ளிரவில் தான் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியால் இரவு முழுவதும் உறங்காமல் அச்சத்துடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பாலியல் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் தியாகராஜன் உண்மைக்கு புறம்பானது என கூறியுள்ளார்.
தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பதிவிட்டுள்ளதாக கூறிய தியாகராஜன், பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி மீ டூ மூலம் பாலியல் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்த்திரையுலகில் தற்போது பலரும் பாலியல் புகார்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.