“கடைநிலை நடிகர்களுக்கு விஜயகாந்த் ஒரு கடவுள்!”- நினைவேந்தல் கூட்டத்தில் சக நடிகர்கள் புகழஞ்சலி!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்திற்கு நினைவேந்தர் கூட்டம் நடத்தப்பட்டது. தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர்கள் ராதாரவி, நாசர், சரத்குமார், கமல்ஹாசன், ரகுமான், நடிகை ரித்திகா உள்ளிட்ட பல நடிகர்நடிகைகள் பங்கேற்றனர்.
மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு அனைவரும் 1 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில், நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைத்து நடிகர் நடிகைகளும் விஜயகாந்திற்கு மேடையில் புகழஞ்சலி செலுத்தினர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர் புகழஞ்சலி:
”நடிகர் விஜயகாந்த் வெண்ணிற ஆடையில் சிறிய கருப்பு பட்டுக்கூட இல்லாமல் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்து சென்றுள்ளார். எப்படி கோழி தன் குஞ்சுகளை அடைகாத்து செல்லுமோ, அதேபோல தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது விஜயகாந்த் அனைவரையும் அரவணைத்து சென்றார்” என்று கூறினார்.
நடிகர் சரத்குமார் புகழஞ்சலி:
சரத்குமார் பேசுகையில், “இப்படி ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேன் என்று என் வாழ்வில் நினைத்து கூட பார்க்கவில்லை. புலன்விசாரணை திரைப்படத்திற்கு வில்லனாக நடிக்க வந்து போது, என்னை பார்த்து இவர் மீசை இல்லாமல் எப்படி இருப்பார் என்று பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த இரண்டு நிமிடத்தில் மீசை இல்லாமல் நான் விஜயகாந்தை சந்தித்தேன். இப்போது மீசையில்லாமல் அவரோடு நினைவேந்தல் நிகழ்ச்சி பங்கேற்றுள்ள சூழல் ஏற்பட்டுவிட்டது வருத்தமளிக்கிறது.
விஜயகாந்தைப்பற்றி மூன்று நிமிடம் பேச சொன்னார்கள். ஆனால் அவரைப் பற்றி மூன்று தலைமுறைக்கு கூட பேசலாம். 2000-2006 வரை நடிகர் சங்கத்தில் அவருடன் நான் பயணித்துள்ளேன். நடிகர் வடிவேல் வரவில்லை என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர், அவர் வீட்டில் உட்கார்ந்து விஜயகாந்த் நினைத்துப் பார்த்து அழுது இருக்கலாம். மறப்போம் மன்னிப்போம் என்று குணம் படைத்தவர் விஜயகாந்த். வடிவேலுவை நிச்சயம் மன்னித்து இருப்பார்.
தமிழ் சமுதாயம் உள்ள காலம் வரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். வள்ளல்களை நாடு மறப்பதில்லை. விஜயகாந்தின் ஆன்மா நடிகர் சங்கத்தையும் தமிழ் சமூகத்தையும் ஆசிர்வதிக்கட்டும்!” என்று பேசினார் சரத்குமார்.
ஏ.சி சண்முகம் புகழஞ்சலி:
ஏ.சி சண்முகம் பேசுகையில், ”குழந்தை உள்ளம் படைத்த ஒரு மாமனிதர், கருணை உள்ளம் கொண்டவர் விஜயகாந்த். ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர். 2014ல் பிரதமர் மோடி முதல் முறையாக பதவியேற்ற போது, அவர் சொன்ன ஒரு பெயர் கேப்டன் விஜயகாந்த் பெயர் மட்டும் தான்.
கடையெழு வள்ளல்களில் எட்டாவது வள்ளல் எம்ஜிஆர் என்றால், ஒன்பதாவது வள்ளல் விஜயகாந்த். எதற்கும் சமரசம் செய்து கொள்ளாதவர், அப்படி சமரசம் செய்திருந்தால் தமிழகத்தின் முதல்வராக இருப்பார். விஜயகாந்த்திற்கு எப்போதும் இறப்பு என்பது கிடையாது, அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பேசினார்.
இயக்குனர் ஆர்கே செல்வமணி புகழஞ்சலி:
இயக்குநர் ஆர்கே செல்வமணி பேசுகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தை இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு நெய்வேலி போராட்டத்தை நடத்திக் காட்டியவர் விஜய் தான். நடிகர் சங்கம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணமும் விஜயகாந்த் தான். எனவே நடிகர் சங்கத்திற்கு அவரது பெயரை தான் வைக்க வேண்டும். இதற்காக ஆலோசனை நடத்துவோம் என்று கூறினால் எனது பதவியை கூட நான் விட்டுவிடுவேன். இதே மேடையில் கூட முடிவெடுக்க வேண்டும். பொதுக்குழு கூட்டி ஆலோசிக்காமல் அவரது பெயரை சூட்ட முடிவு எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் தனது நன்றி கடனை திருப்பி செலுத்துவதாக இருந்தால், நடிகர் சங்கத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.
பொது சொத்தை எடுத்துக் கொள்ளாத ஒரு தலைவன். காந்தி கூட பொது இடத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால், விஜயகாந்த் பொது சொத்து வேண்டாம் என்று தன்னுடைய இடத்திலேயே அடக்கமாகியுள்ளார். விஜயகாந்த் வாழும் வரை அவரது பலம் தெரியவில்லை அவர் மறைந்த பின்பு தான் தெரிகிறது” என்று எமோசனலாக பேசினார்.
நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி:
நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “கடைநிலை நடிகர்களுக்கு எல்லாம் விஜயகாந்த் ஒரு கடவுளாக இருந்துள்ளார். விஜயகாந்திடம் எனக்கு பிடித்தது அவரது நியாயமான கோபம் தான். தனக்குப் பிடிக்காதவர்களைக் கூட அழைத்துப் பேசக்கூடிய தைரியம் உள்ளவர் விஜயகாந்த்” என்று புகழ்ந்து பேசினார்.