துருவ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ துருவ் விக்ரம். ஆதித்ய வர்மா, மகான் படங்களில் நடித்தவர், இதற்கடுத்தாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த `பைசன் காளமாடன்' படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இதனையடுத்து அவர் எந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் இன்று துருவின் அடுத்த பட அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை, பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு ஆக்ஷன் படமாக இது உருவாகிறது.
துருவ் விக்ரம் இதுவரை ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பை வரும் அக்டோபர் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
துருவ் விக்ரமின் பிறந்தநாளான செப்டம்பர் 23-ம் தேதி இப்படத்தின் தலைப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே நாளில் படத்தில் நடிக்கும் முழுமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் நாளை துருவ் நடிப்பில் மைத்ரி தயாரிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே துருவ் ரசிகர்களுக்கு பேக் டு பேக் அப்டேட் வர இருக்கிறது.

