ஓடிடி திரைப் பார்வை: '99 சாங்ஸ்' - திரையில் ஒரு கதைசொல்லியாக வென்றாரா ரஹ்மான்?

ஓடிடி திரைப் பார்வை: '99 சாங்ஸ்' - திரையில் ஒரு கதைசொல்லியாக வென்றாரா ரஹ்மான்?
ஓடிடி திரைப் பார்வை: '99 சாங்ஸ்' - திரையில் ஒரு கதைசொல்லியாக வென்றாரா ரஹ்மான்?

இசைவெளியின் நீள அகலங்களை புயலென அளந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சர்வதேச அளவில் இசை ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து வருபவர் அவர். இசையிலிருந்து கதைசொல்லி எனும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ரகுமான் கதை எழுதி இசை அமைத்திருக்கும் சினிமா '99 சாங்ஸ்'. இப்படம் கடந்த மாதம் வெளியானது. பெரிய இசை விருந்து என புகழப்பட்ட இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

படத்தின் கதை ரொம்பவே சிம்பிள். நாயகன் ஜெய் இசைக்கலைஞனாக நினைக்கிறார். இசையைப் போலவே இனிமையான சோபியை அவர் காதலிக்கிறார். பெரும் செல்வந்தரான சோபியின் தந்தை, நாயகனை அழைத்து ‘நீ 100 நல்ல பாடல்கள் உருவாக்கிவிட்டு வா. நான் என் மகளைத் தருகிறேன்’ என்று சொல்லவே 100 பாடல்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கும் நாயகனின் ஏற்ற இறக்கம் கொண்ட இசைப் பயணமே '99 சாங்ஸ்'.

மேகாலயாவில் இருக்கும் சில்லாங்கிற்கு இசை படைக்க தன் நண்பனின் உதவியுடன் பயணிக்கும் நாயகனுக்கு சில்லாங்கில் சில விரும்பத்தகாத விசயங்கள் நடந்து விடுகின்றன. ஒரு துளி மதுவைக் கூட அதுவரை சுவைத்திடாத நாயகன் அங்கு ஒரு துரதிருஷ்டவசமான சூழலில் போதைப் பொருளை உட்கொண்டு விடுகிறார். பிறகு நடந்தவை என்ன..? சோபியை நாயகன் கரம் பிடித்தாரா..? 100 பாடல்களை அவர் உருவாக்கினாரா என்பதே திரைக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் எஹன்பாட் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் எட்ல்சி இருவருமே மெட்டும், குரலும் போல அத்தனை பொருத்தம். மனிஷா கொய்ராலா தவிர படத்தில் வரும் பெரும்பாலான முகங்கள் நமக்கு புதுசு. நாயகனின் சின்ன வயது ப்ளாஸ் பேக் காட்சிகளை அழகாக செதுக்கியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் விஷ்வாஸ் கிருஷ்ண மூர்த்தி. இசையினை கூர்ந்து கவனிக்க அனைத்து மதக் கூடங்களுக்கும் நடக்கும் சிறுவனின் காட்சிகள் இதம். இந்த சினிமா இசை தொர்பானது என்பதால் படம் முழுக்க ஒரு குளுமையாக டோனில் படம்பிடித்திருக்கிறார்கள் இதன் ஒளிப்பதிவாளர்கள் ஸ்ரீனிவாஸ் ஆச்சாரி மற்றும் டனே சதம். படத்தொகுப்பாளர்கள் அக்‌ஷய் மெஹ்தா மற்றும் ஸ்ரேயாஸ் பெல்டாங்கி ஆகியோர் காட்சிகளை ஒரு பியானோ இசையினைப் போல கோர்த்திருக்கிறார்கள்.

“க்ளாஸிக்கல் இசையானது சட்டம் பேசுறவங்களுக்கு, ஜாஸ் இசைதான் மக்களுக்கானது”, “பார்வையை விட உணர்வுகள் வலிமையானது”, “கலை கலைனு உன்னப் போல பலர் இங்க தங்களோட குடும்ப சந்தோசங்கள சிதச்சிருக்காங்க” போன்ற வசனங்கள் மனதைத் தொடுகின்றன. இசையால் ஏ.ஆர்.ரகுமான் நம்மை திருப்தி செய்திருக்கிறார். ஆனால் படத்தின் பாடல் வரிகளில் மொழிபெயர்ப்பு வாடை இருப்பதை தவிர்க்க முடியவில்லை. வலுவற்ற திரைக்கதை, மனதிற்கு ஒட்டாத கதைக்களம் என படத்தில் சொல்லத்தக்க குறைகள் நிறையவே உண்டு. இப்படத்தில் ரகுமான் கடத்திய உணர்வுகளை திரைமொழியானது கடத்தத் தவறிவிட்டது என்றே சொல்லலாம்.

அமெரிக்காவில் வாழ்ந்த கித்தார் இசை மேதை ஜெம்மி ஹெண்ட்ரிக்ஸ் பற்றிய வசனங்கள் வருவது அழகு. அதிலும் ஜென்னி இடது கை கித்தாரிஸ்ட்டா வலது கை கித்தாரிஸ்டா என கிண்டலாக கேட்டு காட்சியின் போக்கில் ஜெம்மியை ஒருமுறை நம் மனதில் பதிவு செய்கிறார்கள். படம் முழுக்க இப்படியாக இசை குறித்த நுட்பமான செய்திகள் உள்ளன. இது சர்வ நிச்சயமாக வெகுஜன மக்களுக்கான சினிமா அல்ல. ஆனால், ரகுமானின் இசை நிச்சயம் அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் கருப்பட்டிபாகு போல கரையும்.

'99 சாங்ஸ்' என்பது ரகுமான் கதை எழுதிய திரைப்படம் என்று சொல்வதை விடவும், இது ரகுமானின் மிகச் சிறந்த ஆல்பம்களின் ஒன்று என்று சொன்னால் சரியாக இருக்கும்.

- சத்யா சுப்ரமணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com