“எல்லோருக்குள்ளும் வாழும் அந்த பழைய காதல்” பேரன்பாய் வருடும் ‘96’

“எல்லோருக்குள்ளும் வாழும் அந்த பழைய காதல்” பேரன்பாய் வருடும் ‘96’
“எல்லோருக்குள்ளும் வாழும் அந்த பழைய காதல்” பேரன்பாய் வருடும் ‘96’

பதின் பருவத்தில் எல்லோருக்குள்ளும் துளிர்க்கும் காதல் கவிதை, பெரும் பிரிவிற்கு பிறகான சந்திப்பில் அது பெரும்கவிதை என்பதை சொல்லும் திரைப்படம் ‘96’.

‘96’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதல்முறையாக ஜோடி சேர்கிறார்கள் எனும் அறிவிப்பிலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில், சில வாரங்களாக வைரலான பாடல்கள் இன்னுமின்னும் எதிர்பார்ப்பை கூட்டியது. அந்த எதிர்பார்ப்புக்கு ‘நாஸ்டால்ஜியா’ குறிப்புகள் மூலம் அழகியல் பூசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரேம்குமார். இயக்குநர் ஒளிப்பதிவாளர் என்பதால் பல காட்சியமைப்புகள் உணர்வின் சாரலாய் முகம் தெறிக்கிறது.

1994-ல் தஞ்சாவூரில் பத்தாம் வகுப்பு படிக்கும் கே. ராமச்சந்திரனுக்கும், அதே வகுப்பின் சக மாணவியான ஜானகிதேவிக்கும் இடையில் துளிர்க்கும் மெல்லிய நேசம், காதலாய் மலர்வதற்குள் காணாமல் போகிறது. மனதின் அடுக்களில் பசுமையாகவே இருக்கும் அந்த நேசத்தின் துளிர், 1996-ம் ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களின் ஒரு திடீர் மறுகூடலில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விட்ட இடத்தில் இருந்தே துளிர்க்கத் தொடங்குகிறது. காதலும், பிரிவும் பேரன்பாய் மாறியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான் ‘96’ படத்தின் காட்சிகள்.

தொன்னூறுகளின் பள்ளி நாட்களை கண்முன் நிறுத்தி இன்று 35 வயதுக்கு மேற்பட்டவர்களை மீண்டும் பள்ளிக்குள் அழைத்துச் செல்லும் தருணங்கள் ‘96’ படத்தில் பல இருக்கின்றன. இளம் விஜய் சேதுபதி கேரக்டரில் வரும் ஆதித்யா பாஸ்கரும், இளம் த்ரிஷாவாக வரும் கௌரி ஜி கிருஷ்ணனும் அத்தனை கச்சிதம். பள்ளி வகுப்பின் முதல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஜானு, அருகில் வந்தாலே இதயத் துடிப்பு எகிறும் ராமுமாய் அவர்களின் நடிப்பு அசர வைத்திருக்கிறது. அவ்வப்போது எஸ்.ஜானகியின் பாடல்கள் ரசனை.

22 ஆண்டுகளுக்குப் பின்னர் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்துள்ள ஒரு நிகழ்வில் மீண்டும் த்ரிஷாவை பார்க்கப் போகும் பதட்டத்தில் கையில் பலூனோடு தவிக்கும் விஜய் சேதுபதி, த்ரிஷா அருகே வந்தததும் மயங்கி விழுந்து, ‘நீ ஒரு ஆம்பள நாட்டுக்கட்ட’ எனும் போது வெட்கப்பட்டு, ‘Are You a Virgin’ எனும்போது கூச்சத்தில் நெளிந்து, தனிமையான தருணத்தில் விரல் தொடும்போது விட்டு விலகி என ஒட்டுமொத்த படத்திலும் அசத்தியிருக்கிறார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷாவிற்கு ‘96’ மிக முக்கியமான படம். விஜய் சேதுபதிக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது தெரிந்ததும் ‘ஷாக்’ ஆவது, விஜய் சேதுபதியை சலூன் கடைக்கு அழைத்துச் சென்று பத்தாம் வகுப்பு மாணவனைப் போல் முடிவெட்டிவிடச் சொல்வது, தன்னை சந்திக்க வந்த விஜய் சேதுபதியை பார்க்கத் தவறியது தெரிந்து கதறி அழுவது என எல்லோருக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும் பழைய காதலியை கண்முன் நிறுத்தியிருக்கிறார். அதுவும், தென்றல் வந்து தீண்டும் போது, யமுனை ஆற்றிலே பாடல்கள் ‘வேற ஃபீல்’.

‘96’ படத்தில் நடிகர்கள், கதையமைப்பு, இயக்கம் ஆகியவற்றுக்கு இணையாய் பெரும் பலம் கூட்டியிருப்பது கோவிந்த் மேனன் இசையமைப்பில் உருவான பாடல்களும், பின்னணி இசையும். ஒரு பாடலை துண்டு துண்டுகளாய் ஹைக்கூவாக்கி அங்கங்கு ஒலிக்க விட்டு ரசிக்க வைக்கிறார், லயிக்க வைக்கிறார், மனதை கனக்கவும் வைக்கிறார். உமாதேவி, கார்த்திக் நேத்தாவின் வரிகளும் மனம் வருடுகின்றன.

விஜய் சேதுபதி, த்ரிஷா தவிர்த்து ஜனகராஜ், பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி என பலரும் அந்தந்த கதாப்பாத்திரங்களில் சரியாக பொருந்தியிருக்கிறார்கள். மகேந்திரன் ஜெயராஜ், சண்முக சுந்தரம் கூட்டணியின் ஒளிப்பதிவும் தேவையான உணர்வினை கடத்துகிறது.

முதல் பாதி தூண்டும் எதிர்பார்ப்பை, இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளின் நீளமும், பேசிக்கொண்டேயிருப்பதும் சற்று மட்டுப்படுத்தினாலும் எல்லோருக்குள்ளும் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும் நினைவுகளை துளிர்க்கவிடும் விதத்தில் ரசனையாகிவிடுகிறது ’96 திரைப்படம்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com