பெப்சி ஸ்டிரைக்: ’காலா’ உட்பட 30 படங்களின் ஷூட்டிங் பாதிப்பு!
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) இன்று முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதையடுத்து ரஜினியின் ’காலா’ உட்பட் பல்வேறு 30 படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
பெப்சி அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நேற்று அறிவித்தது. அதுகுறித்து பேசிய அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ‘கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) பெரும் பங்கு வகித்து வருகிறது. தொழிலாளர்களுக்கான சலுகைகளை பெறுவதில் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பல சூழலில் இழுபறி நிலவிய போதும் எங்களது உரிமைகளை விட்டுக் கொடுத்து தமிழ் சினிமாவின் பயணத்துக்கு உதவியிருக்கிறோம். தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையை உணர்ந்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக்கூட விட்டுக் கொடுத்துள்ளோம். இந்நிலையில் எங்களது அமைப்பின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக புதிய அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. மற்றொரு தொழிலாளர் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறது. இதைக் கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்கிறோம். 5-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். கோரிக்கைகளை ஏற்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபடவுள்ளனர்’ என்றார்.
இதையடுத்து சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் நடந்துவந்த சுமார் 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.