“உடல்நிலை சரியில்லாதபோது படத்திலிருந்து விலக நினைத்தேன்” - ‘2.0’ ரஜினி
‘2.0’ திரைப்படத்தில் ஒட்டுமொத்த உலகத்துக்கான செய்தி உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் 2.0. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர் ரகுமான், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொழில்நுட்பத்தில் கலக்கலாக வெளியாகியுள்ள ட்ரெய்லரை சினிமா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர் பல கோடி ரூபாயில் உருவாகியுள்ள 2.0 படத்தில் 4K தொழில்நுட்பம் கொண்ட ஒலி உலகத்திலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். உடல்நிலை சரியில்லாத போதும், டெல்லியில் கடும் வெயிலிலும் ரஜினிகாந்த் நடித்து கொடுத்தார் என்றும் தெரிவித்தார்.
ட்ரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு மேடையில் பேசிய ரஜினிகாந்த் 2.0 திரைப்படம் சூப்பர், டூப்பர் ஹிட் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ஷங்கர் மிகவும் நம்பிக்கையான மனிதர். அவர் ஒரு மந்திரக்காரர். எந்த ஒரு கலைஞரும் தோல்வி அடைய வேண்டுமென்பதற்காக படம் எடுப்பதில்லை. லேட்டா வந்தாலும் கரெக்டா அடிக்கணும். அதனை 2.0 திரைப்படம் செய்யும்.
கிட்டத்தட்ட ரூ.550 கோடியில் படம் எடுக்கப்பட்டாலும் அதை விட அதிகமாக வசூல் செய்யும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் கோஹினூர் வைரம் போலத்தான், அப்படி கிடைத்தவர்தான் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன். 2.0 திரைப்படம் அனைவருக்குமான படம். இந்தப் படத்தில் ஒட்டுமொத்த உலகத்துக்கான செய்தி உள்ளது. உடல்நிலை சரியில்லாதபோது, படத்திலிருந்து விலக நினைத்தேன். ஆனால் இயக்குநர் ஷங்கர் விடவில்லை. படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம் என தயாரிப்பாளர் கூறினார் என்று தெரிவித்தார்.
ரூ.543 கோடியில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் நவம்பர் 29-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.