இன்று தொடங்குகிறது 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - 51 நாடுகள் பங்கேற்பு

இன்று தொடங்குகிறது 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - 51 நாடுகள் பங்கேற்பு
இன்று தொடங்குகிறது 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - 51 நாடுகள் பங்கேற்பு

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. அதில் 51 நாடுகளைச் சேர்ந்த 102 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF), சென்னையில் இன்று தொடங்குகிறது. இன்று முதல் (டிசம்பர் 15) முதல் 22 வரை இந்த விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் திரையிடப்படும் படங்களில், பா.ரஞ்சித் இயக்கிய 'நட்சத்திரம் நகர்கிறது', பார்த்திபன் இயக்கிய 'சிங்கிள் ஷாட்' படம் 'இரவின் நிழல்', விஜய் சேதுபதி - சீனு ராமசாமியின் 'மாமனிதன்' என தமிழ் பிரிவில் 12 திரைப்படங்களும் இந்தியன் பனோரமா பிரிவில் மூன்று தமிழ்ப்படங்களும் என 15 தமிழ்ப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னை பி.வி.ஆர். காம்பளக்ஸ் தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் சர்வதேச திரைப்பட விழா நாளை முதல் 22 வரை எட்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. விழாவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் உட்பட 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழக அரசின் ஆதரவுடன், இந்தோ சினி அப்ரிசியேஷன், பிவிஆர் சினிமா ஆகியவை இணைந்து, இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது. இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் இந்த நிகழ்வை தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்கிறார்.

தகுதியான தமிழ்ப்படங்களுக்கு CIFF-ல் போட்டி பிரிவு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 12 தமிழ்ப்படங்கள் இந்த பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதில் மூன்று படங்கள சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 தமிழ்ப்படங்களில் கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'கார்கி', பா.ரஞ்சித்-ன் 'நட்சத்திரம் நகர்கிறது'. பார்த்திபனின் 'இரவின் நிழல்', விஜய் சேதுபதி-சீனு ராமசாமியின் 'மாமனிதன்', ராம்நாத் பழனிகுமாரின் 'ஆதார்', சிம்புதேவனின் ஆந்தாலஜி படமான 'கசடதபற', வைபவ் நடித்த 'பபூன்', மனோ வீ கண்ணதாசனின் 'இறுதி பக்கம்', நயன்தாரா நடித்த 'ஓ2' ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியன் பனோரமா பிரிவில் 15 இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 'கடைசி விவசாயி', 'மாலைநேர மல்லிப்பூ', 'போத்தனுார் தபால் நிலையம்' ஆகிய மூன்று படங்களும் திரையிடப்பட உள்ளன. மேலும் ஒரியா, சமஸ்கிருத மொழி படங்களும், முதன்முறையாக திரையிடப்பட உள்ளன.

ஆஸ்கர், கேன்ஸ், கோல்டன் லயன் விருது விழாவில் திரையிடப்பட்ட படங்கள், சென்னையில் நடக்கும் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. 'ஏஇஐஒயு' என்ற ஜெர்மன் படம், பெண்களுக்கு பிரத்யேக காட்சியாக திரையிடப்பட உள்ளது.

மேலும், கலை இலக்கியத்துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்கும் 12 கலந்தாய்வு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 'பொன்னியின் செல்வன்', 'பீஸ்ட்', 'இரவின் நிழல்' படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களும் பங்கேற்று பேச உள்ளனர். அதோடு இன்னும் வெளியாகாத 'பிகினிங்', 'யுத்த காண்டம்' மற்றும் ''ஆடு' ஆகியவையும் அதிகாரப்பூர்வ தேர்வில் இடம்பெற்றுள்ளன. இவைகள் சிறந்த திரைப்பட விருதுக்கு போட்டியிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com