சிவகார்த்திகேயன் to ரஜினிகாந்த்.. 2025-ல் வரிசை கட்டி நிற்கும் ஸ்டார்களின் படங்கள்! என்னென்ன?
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் என்ற மெகா கூட்டணியில் உருவாகிறது `கூலி’. படத்தின் பெரும்பான்மை காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆகஸ்டு அல்லது தீபாவளியை குறிவைத்து அக்டோபரில் படம் வரலாம் என சொல்லப்படுகிறது.
கமல் ஹாசன்
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது `தக் லைஃப்’. சிம்பு, த்ரிஷா, அஷோக் செல்வன், ஐஸ்வர்ய லஷ்மி, ஜோஜு ஜார்ஜ் எனப் பல நடிகர்களும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறது படம். டீசரில் அறிவித்தது போல ஜீன் 5ல் படத்தை வெளியிட மும்முரமாக நடந்து வருகின்றன வேலைகள்.
இதற்கு அடுத்து கமல் நடிப்பில் முக்கால்வாசி தயாராகி இருக்கும் படம் `இந்தியன் 3’. அதன் வேலைகள் சூடு பிடித்தால், டிசம்பரில் படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. எனவே கமலுக்கு 2 படங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
விஜய்
விஜய் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகிவரும் படம் `ஜன நாயகன்’. படத்தின் அறிவிப்பு வந்த போது அக்டோபர் வெளியீடாக, அதாவது தீபாவளியைக் குறிவைத்து படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது `ஜன நாயகன்’ இந்த ஆண்டு வெளியாவது சந்தேகம் தான் என சொல்கிறார்கள்.
அஜித்
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் `குட் பேட் அக்லி’. விடாமுயற்சி கூடவே சேர்த்து GBUல் நடித்துக் கொடுத்தார் அஜித். இதன் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. படம் ஏப்ரல் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் மாறுதல் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் கண்டிப்பாக இந்த ஆண்டு ரிலீஸ் என்பது உறுதி.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் - ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் `SK23' படம் உருவாகி வருகிறது. ஆகஸ்ட் 15 இப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதே நேரம் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படமும் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இடையில் SK24 விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே சிவா நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
சூர்யா
சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கிறது `ரெட்ரோ’. கேங்க்ஸ்டர் கதை, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் என அசத்தலான காஸ்டிங் போன்றவை படத்தின் மீது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. மே 1ம் தேதி படம் ரிலீஸ். இதனையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த ஆண்டே படத்தைக் கொண்டு வர வேலைகள் நடக்கிறது. ஆனால் அடுத்த ஆண்டு படம் தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறது.
வடிவேலு
வடிவேலு நடிப்பில் சுவாரஸ்யமான இரு படங்கள் தயாராகிறது. சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள `கேங்கர்ஸ்’, படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சதீஷ் சங்கர் இயக்கத்தில் ஃபஹத் பாசில் - வடிவேலு நடிக்கும் `மாரீசன்’ படம் தயாராகி வருகிறது. இவ்விரு படங்கள் மூலம் வடிவேலுவுக்கு இந்த ஆண்டு இரண்டு ரிலீஸ்.
விக்ரம்
விக்ரம் - அருண்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் `வீர தீர சூரன் பாகம் 2’. பொங்கலுக்கே வெளியாக வேண்டிய படம், இப்போது மார்ச் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து, வெகு காலமாக வெளியாகாமல் இருக்கும் `துருவ நட்சத்திரம்’ இந்தாண்டு வெளியாகும் என அதன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியிருக்கிறார். இந்த ஆண்டு, விக்ரமுக்கு இரண்டு ரிலீஸ் என உறுதியாக சொல்லலாம். இதனையடுத்து மண்டேலா, மாவீரன் படங்களை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சியான்.
தனுஷ்
தனுஷுக்கு இயக்கியுள்ள `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பிப்ரவரி 21 ரிலீஸ், நடித்து, இயக்கியுள்ள `இட்லி கடை’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 10 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டாலும், இதில் மாறுதல் வரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு ரிலீஸ் என்பதில் மாற்றமில்லை. நடிகராக தெலுங்கில் சேகர் கம்மூலா இயக்கத்தில் உருவாகியுள்ள `குபேரா’ ஜூலை மாதமும், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாக இருக்கும் `Tere Ishk Mein' நவம்பர் 28ம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. எனவே எப்படிப் பார்த்தாலும் தனுஷ் நடிப்பில் குறைந்தது 3 படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் ஆவது உறுதி.
கார்த்தி
கார்த்தி - நலன் குமாரசாமி என வித்தியாசமான காம்போவில் உருவாகும் படம் `வா வாத்தியார்’. சத்யராஜ், ராஜ்கிரன், ஆனந்த்ராஜ் என நடிகர்கள் தேர்வும் வித்தியாசமாக இருப்பதால் படத்தின் மீது ஏக எதிர்பார்ப்பு உள்ளது. இன்னும் சில தினங்கள் படப்பிடிப்பு பாக்கி என சொல்லப்படுகிறது. ஆனால் கண்டிப்பாக இந்த ஆண்டு ரிலீஸ் என்பது மட்டும் கன்ஃபார்ம். இதனை அடுத்து மித்ரன் இயக்கத்தில் `சர்தார் 2’, `டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் `கார்த்தி 29’ ஆகிய படங்கள் உருவாகவுள்ளது. `கூலி’ படத்தை முடித்ததும் லோகேஷ் - கார்த்தி கூட்டணியில் `கைதி 2’வும் தயாராக உள்ளது. எனவே கார்த்திக்கு இந்த ஆண்டு ஒரு படம் தான் என்றாலும், அடுத்த ஆண்டு பெரிய வெரைட்டி கொடுக்க இருக்கிறார்.
சிம்பு
சிம்பு - `பார்க்கிங்’ ராம்குமார் கூட்டணியில் அறிவிக்கப்பட்டுள்ள படம் `STR 49’. `இட்லி கடை’, `பராசக்தி’ படங்களை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இந்த வருடமே STR 49ஐ திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதோடு `தக் லைஃப்’ படத்தையும் சேர்த்தால் சிம்பு நடிப்பில் இந்தாண்டு இரண்டு படங்கள் ரிலீஸ்.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, மிஷ்கின் இயக்கத்தில் `டிரெய்ன்’, ஆறுமுக குமார் இயக்கத்தில் `Ace' படங்களின் நடித்து முடித்துவிட்டார். அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்தாண்டு விஜய் சேதுபதிக்கு 2 ரிலீஸ் கன்ஃபார்ம்.
பெரிய ஸ்டார் படங்கள் இல்லாமல் சில சுவாரஸ்யமான படங்களும் இந்தாண்டு வர இருக்கின்றன. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் `டிராகன்’, பிப்ரவரி 21 வெளியாகிறது. ராம் இயக்கியுள்ள `ஏழு கடல் ஏழு மலை’ மார்ச் மாதம் வெளியாகிறது. அர்ஜூன் தாஸ் - அதிதி ஷங்கர் நடித்துள்ள `ஒன்ஸ் மோர்’, செல்வமணி இயக்கத்தில் துல்கர் நடிக்கும் `காந்தா’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் `பைசன்’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துவரும் `LIK', செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் `7ஜி பாகம் 2’, `மெண்டல் மனதில்’ என இந்தாண்டு ஸ்டார் படங்களும், புதுமையான படங்களும் வெளியாக காத்திருக்கின்றன.