20ஆம் ஆண்டு “துள்ளாத மனமும் துள்ளும்” - திரும்பும் நினைவுகள்..!

20ஆம் ஆண்டு “துள்ளாத மனமும் துள்ளும்” - திரும்பும் நினைவுகள்..!
20ஆம் ஆண்டு “துள்ளாத மனமும் துள்ளும்” - திரும்பும் நினைவுகள்..!

நடிகர் விஜய்யின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் வெளியாகி இன்றும் 20 வருடங்கள் ஆகிவிட்டன.

இயக்குநர் எழில் இயக்கத்தில் விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் 1999ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் வெளியான திரைப்படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல் எனலாம். ‘குட்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார் விஜய். கல்லூரிப் பெண்ணாகவும், கண் இழந்த பெண்ணாகவும் ‘ருக்குமணி’ என்ற பெயரில் வருவார் சிம்ரன். இரண்டு பெயர்களும் சினிமா ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்ததவை.

படத்தில் விஜய் பாடல் பாடும், கேபிள் கனெக்‌ஷன் பையனாக வலம் வந்திருப்பார். மணிவண்ணன், தாமு, வையாபுரி, பொன்னம்பலம், மதன்பாபு, பாரி வெங்கட் (டவுசர் பாண்டி) ஆகிய கதாபாத்திரங்களுடன் படம் கலகலப்பாக செல்லும். பின்னர் விஜய் ஜெயிலுக்குப் போக, சிம்ரன் மாவட்ட ஆட்சியர் ஆக இருவரும் இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா ? என கதை அமைக்கப்பட்டிருக்கும். இதற்கிடையே கண் தெரியாத நிலையில் தன்னுடனே இருக்கும் குட்டியை கடைசி வரை ருக்குமணிக்கு தெரியாது. அவர்கள் இருவரையும் சேர்க்கும் ஒரே விஷயம் பாடல் தான். இறுதியில் “இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை” என ரத்தம் வடிய விஜய் பாட, சிம்ரன் ஓட ரசிகர்கள் ஆவல் அதிகரிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 

இந்தப் படம் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்ததுடன், கேரளாவில் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தி தந்தது. கேரளாவில் ‘குட்டி’ என்பது பழகிப்போன வார்த்தை என்பதால் அந்த வரவேற்பு கிடைத்ததா? என்பது தனிக்கேள்வி. இருப்பினும் விஜய் சிம்ரன் கூட்டணி வெற்றிக்கூட்டணி என்ற பெயரையும் இப்படம் பெற்றுத்தந்தது. இந்தப் படம் இன்றுடன் 20 வயதை எட்டுவதையொட்டி, விஜய் ரசிகர்கள் அதை ட்ரெண்டாக்கியுள்ளனர். பலரும் அந்தப் படத்தில் பாடல், வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். 

இந்தப் படம் வெளியாவதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் ‘ஒன்ஸ்மோர்’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்திற்கு பின்பு ‘ப்ரியமானவளே’, ‘உதயா’ ஆகிய படங்களிலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். யூத் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிம்ரன் வந்திருப்பார். அந்த ‘ஆள்தோட்ட பூபதி’ பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com