தென்னிந்திய சினிமாவுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக மாறியிருக்கிறது. வசூலில் சாதனை படைத்து உலக கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளனர் தென்னிந்திய திரைப்படத்துறையினர்.
உலக அளவில் 1650 கோடி ரூபாய் வசூலித்து இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் சாதனை படைத்தது பாகுபலி-2. ஹிந்தி பதிப்பு மட்டும் 500 கோடி வசூவை வாரிக்குவித்தது. இந்நிலையில் பாகுபலி சாதனைகளை முறியடிக்கும் விதத்தில் 2.0 படக்குழுவினர் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருக்கிறது 2.0 . இப்படத்தை 3டி தொழில் நுட்பத்தில் வெளியிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 3டி தொழில் நுட்பத்தை பொறுத்த தியேட்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது 2.0 படக்குழு. 5 மொழிகளில் மட்டுமே பாகுபலி-2 வெளியிடப்பட்டது. ஆனால், 2.0 பல மொழிகளில் உருவானாலும், ஜப்பானிஸ் கொரியன் சைனீஸ் உள்ளிட்ட 15 மொழிகளின் டப் செய்யப்பட்டு வெளியிடும் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதேபோல் இந்தியாவில் பாகுபலி-2 படம் 6500 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. ஆனால், 2.0 படத்தை 7000 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். பாகுபலி-2 சாதனைகளை முறியடித்தே ஆக வேண்டும் என மும்முரமாக செயல்பட்டு வருகிறது 2.0 படக்குழு.

