மௌனம் பேசியதே ‘சந்தியா’ முதல்.. 96 ‘ஜானு’ வரை - த்ரிஷாவின் 17 ஆண்டு திரைப்பயணம்

மௌனம் பேசியதே ‘சந்தியா’ முதல்.. 96 ‘ஜானு’ வரை - த்ரிஷாவின் 17 ஆண்டு திரைப்பயணம்
மௌனம் பேசியதே ‘சந்தியா’ முதல்.. 96 ‘ஜானு’ வரை - த்ரிஷாவின் 17 ஆண்டு திரைப்பயணம்

தமிழ் சினிமாவில் சில வருடங்கள் கதாநாயகியாக இருப்பதே அபூர்வம். ஆனால் த்ரிஷா, 17 ஆண்டுகளை திரை உலலில் நிறைவு செய்துள்ளார். தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் திறமையான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 

தமிழ் சினிமாவில் ‘மெளனம் பேசியதே’ மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார் த்ரிஷா. இந்தப் படம் டிசம்பர் 13 ஆம் தேதி 2002 ஆண்டு திரைக்கு வந்தது. இப்படம் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. இயக்குநர் அமீர் இயக்கி இப்படத்தில் சூர்யா கதாநாயகியாக நடித்தார். ஜெமினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் லைலாவும் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  

இத்தனை ஆண்டுகளை கடந்த பிறகும் இன்றும் இந்தப் படம் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பப்படுகிறது. மக்கள் விரும்பும் படமாக இப்படம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் இந்தப் படம் மூலம் அறிமுகமான த்ரிஷா, இதன் பிறகு மெல்ல தெலுங்கு, கன்னடம் என வேறு மொழிகளிலும் கால் பதித்தார். ஆனாலும் அவர் அதிக காலம் அங்கே நீடிக்கவில்லை. தமிழே அவரது பிரதான களமாக அமைந்தது.

இதனை அடுத்து அடுத்தடுத்த ஆண்டுகளில், பிரபலமான பிற மொழி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா. ‘நீ மனசு நாக்கு தெலுசு’,‘வர்ஷம்’ ‘கில்லி’, ‘நுவோஸ்தானந்தே நேனோடந்தனா’, ‘அதாடு’,  ‘ஆறு’, பர்ணமி’ என தமிழிலும் தெலுங்கிலும் மாறிமாறி பிரபலமான படங்களில் நடித்தார். மேலும், இது அவரது சினிமா வாழ்வில் பல அதிசயங்களை ஏற்படுத்தியது எனத் தனியே சொல்லத் தேவையில்லை. அவரது மற்ற குறிப்பிடத்தக்க படங்களில்  ‘ஆயுத எழுத்து’, ‘உனக்கும் எனக்கும்’, ‘ஸ்டாலின்’  ‘அதாவரி மாதலகு அர்த்தலே வேறுலே’, ‘கிருஷ்ணா’, ‘குருவி’, ‘அபியம் நானும்’, ‘சர்வம்’ , ‘விண்ணைத்தாண்டி வருயாயா’, ‘கொடி’ என பல படங்கள் அவரது திரை வாழ்வில் தரமான வரிசையில் அமைந்தன. 

2010 ஆம் ஆண்டில் வெளியான ரொமாண்டிக் எண்டர்டெய்னர் படமான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வில் சிம்புவுடனான இவரது நடிப்பு மேலும் அதிக ரசிகர்களை இவருக்கு சம்பாதித்து கொடுத்தது. இதில் புதிய உடல்மொழியுடன் த்ரிஷா தோன்றிய காட்சிகள் இளம் காதல் உணர்வாளர்களிடையே ஈர்ப்பாக அமைந்தது. ஆகவே படம் எதிர்பார்த்ததை விட இவருக்கு வெற்றியை ஈட்டி தந்தது. மேலும் பல புதிய வாய்ப்புகளுக்கான வழியை அவருக்குத் திறந்துவிட்டது.

பின்னர், இவர் ‘மன்மதன் அம்பு’, ‘மங்கத்தா’, ‘பாடிகார்ட்’, ‘பவர்’, ‘என்னை அறிந்தால்’, ‘ஹே ஜூட்’ என பல முத்திரைகளை பதித்தார் த்ரிஷா. இந்தப் படங்களை எல்லாம் கடந்து த்ரிஷா வாழ்வில் மாபெரும் அஃமார்க் முத்திரையை ஏற்படுத்தி தந்த திரைப்பட ‘96’. இதில் ஜானு கதாபாத்திரம் பெரும் அடையாளமாக அவருக்கு அமைந்தது. பல காதல் ஜோடிகளிடம் ஜானு ஒரு மைல்கல்லாக அமைந்தார். ‘பேட்ட’ படத்தின் மூலம் த்ரிஷா தனது பல ஆண்டுகள் கனவை நிறைவேற்றிக் கொண்டார். அவருக்குப் பின்னால் திரை உலகிற்கு அறிமுகமான பல நடிகைகள் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துவிட்ட போது, அவர்களுக்கு எல்லாம் சீனியரான த்ரிஷாவுக்கு அந்த வாய்ப்பு அமையவே இல்லை. அந்த அதிர்ஷ்டம் அவருக்கு ‘பேட்ட’ மூலம் நிறைவேறியது. 

17 ஆண்டுகளுக்குப் பிறகு திரை உலகில் இவரது சாதனை தொடந்து கொண்டேதான் உள்ளது. இன்றும் இளமை மாறாமல் உடல் கட்டுடன் இருக்கும் த்ரிஷா இளம் நடிகைகளுக்கு இணையாக வலம் வருகிறார். சுந்தர் பாலு இயக்கத்தில் கர்ஜனை, திருஞானம் இயக்கத்தில் ‘பரமபதம் விளையாட்டு’ எம் சரவணன் இயக்கும் ‘ராங்கி’ சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் ‘சுகர்’ என நீள்கிறது இவரது திரைப் பயணம். இவரது 17 ஆண்டு பயணத்திற்காக பல திரை ரசிகர்கள் அவரது டவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். 

இடையில் திருமண வாழ்வில் ஏற்பட்ட சில தடுமாற்றங்களை கடந்தும் ஒரு பெண்ணாக த்ரிஷா, தன்னம்பிக்கையை தளரவிடாமல் வெற்றிகளை அடைந்து வருவது அது பல பெண்களுக்கு ஒரு முன்மாதிரி.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com