17 வருடங்கள் வெற்றி நாயகன் தனுஷ் - தமிழ் சினிமாவின் ஒரு தரமான சம்பவம்

17 வருடங்கள் வெற்றி நாயகன் தனுஷ் - தமிழ் சினிமாவின் ஒரு தரமான சம்பவம்
17 வருடங்கள் வெற்றி நாயகன் தனுஷ் - தமிழ் சினிமாவின் ஒரு தரமான சம்பவம்

தமிழ் சினிமாவின் தலைமகன் இல்லை தனுஷ். ஆனால் தலையெழுத்தை மாற்ற வந்த தங்கமகன் தனுஷ். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அந்த உண்மை அன்று அவரது அப்பா கஸ்தூரி ராஜாவிற்கே தெரியாது என்பதுதான். தமிழ் சினிமா உலகில் கஸ்தூரி ராஜாவிற்கு ஒரு அடையாளம் தான் கிடைத்தது. அதுகூட அவ்வளவு அடையாளம் இல்லை. திரைக்குப் பின்னால் இருக்கும் உலகத்திற்கு மட்டுமே தெரிய கூடிய இயக்குநர் பணி அது. ஆனால் தனுஷுக்கு பல அடையாளங்கள் உண்டு. நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பல முகம் கொண்ட தனுஷுக்கு அவரது குடும்பத்தை பொருத்தவரை ஒரே அடையாளம்தான். அது வெங்கடேஷ் பிரபு. ஆம்! அதுதான் அவரது பிறவி அடையாளம். அப்புறம்தான் அவர் தனுஷ். 

ஒல்லியான தேகம், அதிகம் ஈர்ப்பு ஏற்படுத்தாத மிக சாதாரண முகம், பெரிய குடும்பத்து பின்னணி எதுவுமே இல்லாத ஒரு பின்புலம் என்று அவருக்கு அமைந்தது அவ்வளவு சுமார் ரகம்தான். ஆனால் இந்த ‘சுமார் மூஞ்சி குமார்’தான் சூப்பர் ஸ்டார் வீட்டு மாப்பிளையாக மாறினார். தேசிய விருதை தட்டிக் கொண்டு வரும் தரமான நடிகராக மாறினார். இப்படி பல ‘தரமான’ சம்பங்கள் அவர் வாழ்க்கையை பின்னால் அலங்கரித்தன. 

அதற்கு முன்னால் அவர் சினிமா கனவுகளே இல்லாத ஒருவர். பல லட்சம் ரசிகர்களை போல முதல் நாள் முதல் ஷோவை தியேட்டரில் உட்கார்ந்து உச்ச நடிகரான ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தை பார்த்த ஒரு இளைஞன். இவர்தான் பின்னாளில் உயர்ந்து வந்து வுண்டர்பார் நிறுவனத்தை நிறுவினார். அதில் ரஜினியை வைத்து படம் தயாரித்தார். எல்லாம் கனவு போல இல்லையா? உண்மைதான். அவரது அண்ணன் செல்வராகவன் இவர் வாழ்க்கைக்கு முதன் முதலாக ஒரு ஏணி போட்டு கொடுத்தார். அதன் மீது ஏறி அவர் ஜன்னலை எட்டிப்பார்ப்பார் என்றுகூட அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் அந்த ஏணியில் ஏறி ஏரோப்ளேனில் பறந்து நிலாவில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் அளவுக்கு உயரத்தில் பறந்தார். 

ஆரம்பகாலத்தில் பஸ்ஸில் ஏறுவதற்கு கூட பணம் இல்லாமல் வெறும் கால்களுடன் சென்னையை வலம் வந்த அவரது அப்பா கஸ்துரிராஜாவின் கால்களை ஜனாதிபதி மாளிகைக்கு கூட்டிக் கொண்டு உட்கார வைத்து அழகு பார்த்தார் தனுஷ். இந்த அதிசயம் அவர் எதிர்பார்க்காதது. வெங்கடேஷ் பிரபுவான தனுஷுக்கு ஒரே கனவுதான் இருந்தது. அது எப்படியாவது படித்து ஒரு ‘செஃப்’ ஆகிவிட வேண்டும். சமையல் செய்ய நினைத்தவர் சமயோஜிதமாக வந்த வாய்ப்பை கட்டிப் பிடித்து கொண்டார். 

முதல் விதை ‘துள்ளுவதோ இளமை’ மூலம் விழுந்தது. 2002ல் இந்தப் படம் வெளியான போது, ‘இவனா? ஹீரோவா?’ என்றவர்கள் லட்சம் பேர் இருப்பார்கள். ஆனால் அந்த லட்சம் பேரை தனுஷ் கவனிக்கவில்லை. தன் லட்சியத்தை பற்றி நினைத்தார். வெறுக்கும் மனிதர்கள் மத்தியில் நயமாக வேலை செய்ய ஆரம்பித்தார். ‘காதல் கொண்டேன்’ வந்தது. பலர் காது கொடுத்து கேட்க ஆரம்பித்தனர். ‘திருடா திருடி’ வெற்றி பெற்றது, பலர் திரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

‘மன்மதராசா’ பாடல் தமிழ் மக்களை ஆட்டிப்படைத்தது. அதன் மூலம் அவருக்கே தெரியாமல் தனுஷ் ஒரு ‘பாப் கல்சரின்’ அடையாளமாக வளர தொடங்கி இருந்தார். ஒரு பக்கம் பாலுமகேந்திராவுடன் ‘அது ஒரு கனாக்காலம்’ இன்னொரு பக்கம் வெற்றிமாறனுடன் ‘பொல்லாதவன்’ எனப் போனது அவரது நடிப்புலக பாதை. சிலர் சீரியஸாக கவனித்தனர். சிலர் சீரியஸாக எதிர்த்தனர். இந்த இரண்டுக்கும் இடையில் வண்டி ஓட்ட ‘ஆடுகளம்’ அமைத்தார். லோக்கல் பாய் தனுஷ் இண்டர்நேஷனல் ‘மரியான்’ஆக மாறினார்.  ‘3’ மூலம் முழு முகத்தை திரைச் சமுகத்திற்கு காட்டினார். 

தனுஷ் தனக்கு கண்ணீர் வடிக்க மேடைகளில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அவர் செய்தது ஒன்றுதான். தன் தைரியத்தை சமூகத்தின் முகத்தில் பதிய வைப்பது. ஆகவேதான் அண்ணனைவிட பெரிய மன்னனாக முடிந்தது இவரால். தமிழ் சினிமாவில் தொடங்கி இந்திய சினிமாவிற்கு சென்று ஹாலிவுட் பக்கமே போய் அழுத்தம் காட்டி விட்டு திரும்பிய தனுஷ் திரைக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆகவே தான் இந்த பில்ட் அப். உண்மையில் இது ‘பில்ட் அப்’ இல்லை. வார்த்தைகளால் யாரை வேண்டுமானாலும் பில்ட் அப் பண்ணலாம். ஆனால் உழைப்புதான் ஒரு மனிதனை உயரத்திற்கு கொண்டு போக ‘பில்ட்’ பண்ணி விடுகிறது. அந்தக் கட்டுமானத்தை தரமாக கட்டிக் கொண்டதில் தனுஷின் உழைப்பு பிரம்மிப்பு நிரம்பியது. 

அவர் நிறுவிய வுண்டர்பார் நிறுவனம் அவரது அண்ணன் திரையில் வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடியபோது முட்டுக் கொடுத்து கரையேற்றி விடுவதற்காக ஆரம்பித்தது. அதை அவரே சொல்லியிருக்கிறார். அண்ணனுக்காக ஆரம்பிக்கப்பட்ட வுண்டர்பார் ‘கபாலி’யை கைப்பற்றும் அளவுக்கு வளர்ந்தது ஒரு சிறப்பான சம்பவம். 

ஒருவகையில் சொல்லப்போனால் ‘வைரல் வீடியோ’, ‘ஆடியோ லீக்’ என்ற வார்த்தைகள் எல்லாம் தனுஷ் மூலம்தான் அறிமுகமானது. தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடல் உலக அளவில் ரசிர்களை இழுத்து வந்தது. அனிருத்தும் தனுஷும் யுடியூப் உலகில் புதிய அத்தியாயத்தை தமிழ் சினிமாவிற்குள் எழுதி முடித்தனர். 14 கோடிக்கு மேல் என்ற கணக்கு அதற்கு முன் தமிழ் சினிமா அறியாதது. இந்த வெற்றி ‘ரவுடி பேபி’ வரை வளர்ந்துள்ளது.   

இந்த வளர்ச்சி ரேகையோடு சேர்ந்து தனுஷின் நடை, உடை, பாவனையும் தரமாக வளர்ந்துள்ளது. பல பரிமாணங்களில் அவர் தன்னை வளர்த்து கொண்டுள்ளார். அழகான கதைகளை தேடும் தனுஷ், தரமான ஆங்கிலத்தை பேசும் அளவுக்கு பாடங்கள் கற்றிருக்கிறார். எந்த மேடையிலும் வேட்டியை விரும்பு அவர், வேண்டாத சர்ச்சைகள் பற்றி கவலை கொள்வதே இல்லை. உயரம் போக போக அவர் சர்ச்சைகள் கச்சை கட்டின. அதன் மூலம் அவர் கோபம் கொள்ளவில்லை. Quiet ஆகிப் போனார். அந்த அடக்கம் அவர் அடைக்கலம் பெற்ற பெரிய குடும்பத்தில் இருந்து கற்றது. ரஜினி சம்பாதிக்காத எதிர்ப்பா? அவர் அரவணைப்பில் உள்ள தனுஷ், தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கையான தடம். ஆகவேதான் அவரது ரசிகர்கள் #17YearsOfDhanushism என ஹேஷ்டேக் போட்டுக் கொண்டி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com