”101 கிலோ டூ 70 கிலோ” - எடையை எப்படி குறைத்தார் சிம்பு? - பயிற்சியாளர் பேட்டி..!
நடிகர் சிலம்பரசன் ஈஸ்வரன் படத்திற்காக எவ்வாறு எடையை குறைத்தார் என்பது தொடர்பாக அவரது பயிற்சியாளர் சந்தீப் மற்றும் நடிகர் மகத் ஆகியோர் பேசியுள்ளனர்.
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஈஸ்வரன். இத்திரைப்படத்திற்காக சிம்பு அவரது உடல் எடையை 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக குறைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று அண்மையில் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து வெளியான ஈஸ்வரன் படத்தின் ப்ர்ஸ்ட் லுக்கும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அவரின் இந்த எடைக்குறைப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றி சிம்புவின் பயிற்சியாளர் சந்தீப் மற்றும் சிம்புவின் நண்பரும் நடிகரும் மகத் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.
அதில் பயிற்சியாளர் சந்தீப் கூறும் போது “ சிம்புவுக்கு பயிற்சி கொடுத்தது சற்று வித்தியாசமான அனுபவம். மற்றவர்கள் போல ஒரே பயிற்சியை அவர் திரும்ப திரும்ப செய்ய விரும்பவில்லை. அதனால் அவருக்கு நான் விதவிதமான பயிற்சிகளை கொடுத்தேன். காலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து நடைபயிற்சி செய்வார். பின்னர் ஜிம்மில் வொர்க்கவுட். இவை தவிர்த்து அவரின் உடல்வலிமை அதிகரிக்க பிரேத்யக பயிற்சியும் கொடுக்கப்பட்டது. வாரத்தில் 4 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்ட சிம்பு தற்போது 5 நாட்கள் பயிற்சி செய்கிறார். இவைத் தவிர்த்து அவர் விளையாடுவதிலும் கவனம் செலுத்தினார்.
கடந்த பிப்ரவரி மாதம் சிம்பு 87 கிலோ வரை எடையை குறைத்தார். அதன் பின்னர் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அவரின் எடை அதிகரித்து விட்டது. அதன் பின்னர் ஜீன் மாதம் மீண்டும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். கடினமாக பயிற்சி செய்து தற்போது 71.1 கிலோ எடை கொண்ட சிம்புவாக மாறி நிற்கிறார்.
அவர் அடிக்கடி சொல்வது “ மன உறுதி எங்கிருக்கிறதோ அங்கு வழியும் இருக்கும்” என்பது. அவர் பற்றிய வதந்திகள் இங்கு உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவருடன் பணியாற்றிய போது அவர் கடினமான உழைப்பாளி என்பது தெரியவந்தது.
முதற்கட்டமாக துரித உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து அல்கலைன் நிறைந்த உணவுகளையும், அதிக ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் எடுத்துக்கொண்டார். அதிக மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் தவிர்த்த சிம்பு, சில சமயங்களில் திரவ உணவுகளையும் எடுத்துக்கொண்டார். இந்தச் சின்ன சின்ன விஷயங்கள் தான் இன்று அவரின் உடல் எடையில் பெருமளவு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் அவருக்கான எல்லா உணவுகளையும் அவரே சமைத்தார்.
நடிகர் மகத் கூறும் போது “ நிறைய விளையாட்டிலும் சிம்பு கவனம் செலுத்தினார். வொர்க் அவுட்டைத் தவிர்த்து டென்னிஸ், நீச்சல், பாக்ஸிங், பேஸ்கட்பால் உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டார். சிம்புவை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது.
சிம்பு கடினமாக தருணங்களை எதிர்கொள்ளும் போது அனைவரும் அவரின் கதை முடிந்து விட்டது என எழுதுவர். ஆனால் ஒவ்வொரு முறையும் அவை அனைத்தும் தவறு என்று நிரூபித்து சிம்பு அதிக பலத்துடன் மீண்டு வருவார்.” என்றார்.
courtesy :https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/101kg-to-71kg-diet-workout-sports-helped-simbu-lose-weight/articleshow/78955943.cms