2015இல் அறிவிப்பு,100 வருஷம் கழித்து ரிலீஸ்..100 Years The Movie You Will Never See பற்றி தெரியுமா?
ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால், அது எப்போது வெளியாகும் என்பதுதான் ரசிகர்களின் முதல் எதிர்பார்ப்பு. கூடுமானவரை மிக விரைவாக படத்தை எடுத்து ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதுதான் படத்தை உருவாக்குபவர்களின் எண்ணமாகவும் இருக்கும். ஆனால், ஒரு திரைப்படம், 100 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெளியாக வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஹாலிவுட்டில் இப்படியொரு வித்தியாசமான முயற்சிதான் 100 Years – The Movie You Will Never See. இப்படம் பற்றி உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு இதோ விவரம், 2015-இல் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானபோதே பெரிய அளவில் பேசப்பட்டது. நடிகர் ஜான் மல்கோவிச் எழுதி நடித்துள்ள இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் ராபர்ட் ரோட்ரிக்ஸ் இயக்கியுள்ளார். 2015-ஆம் ஆண்டு இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்டபோதே, அதன் வெளியீட்டுத் தேதி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. படம் நவம்பர் 18, 2115 அன்றுதான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் படம் எதைப் பற்றியது என்ற ஆவல் வெகுவாக எழுந்தாலும், 100 Years திரைப்படத்தின் முழுக் கதையும் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. படத்தின் உள்ளடக்கம் பொதுமக்களுக்கு வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால், படத்தை உருவாக்கியவர்கள் வெளியிட்ட மூன்று டீசர்கள் மூலம், திரைப்படம் எதிர்கால உலகத்தை மையமாகக் கொண்ட சைன்ஸ் ஃபிக்ஷன் படம் என்பதை மட்டும் ஓர் ஊகமாக நாம் புரிந்துகொள்ளலாம். ஏன் இப்படி ஒரு முயற்சி என்பதைத் தெரிந்துகொள்ள மதுபான நிறுவனமான Rémy Martinன் Louis XIII Cognac பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். Louis XIII Cognac தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பழச் சாறுகள் பல தலைமுறைகளாகப் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு decanter குடுவை அளவுக்கான பானத்தை உருவாகவே சுமார் 100 ஆண்டுகள் தேவைப்படும் என்பதை உணர்த்தும் விதமாகவே, இந்த திரைப்படத்தை 100 ஆண்டுகள் கழித்து வெளியிடும் திட்டத்தைப் போட்டு இருக்கிறார்கள்.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் Robert Rodriguez இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். இதனைப்பற்றி அவர் சொல்லும்போது, ”உடனடியாக ரசிகர்கள் பார்க்கும் வகையில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு பதிலாக, தன்னால் உருவாக்கப்பட்ட படத்தை பார்க்கப்போகும் எதிர்கால தலைமுறை யார் என்பதே தெரியாத சூழலில் ஒரு படத்தை உருவாக்குவது இந்த திட்டத்தின் முக்கிய சவாலாக இருந்தது” என்கிறார்.
இந்தப் படத்தை முடித்த பின்னர், அது ஒரு பிரத்யேக பாதுகாப்புப் பெட்டிக்குள் வைக்கப்பட்டது. அந்தப் பெட்டி தானாகவே நவம்பர் 18, 2115 அன்று திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்றுதான் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பிரீமியர் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படம் பொதுமக்கள் பார்வைக்கும் கிடையாது. இதற்காக, இரும்பில் செய்யப்பட 1,000 டிக்கெட்கள் உருவாக்கப்பட்டு, அதனைத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் அளித்துள்ளனர். இதில் விஷயம் என்னவென்றால், 2015-ல் படத்திற்கான டிக்கெட்டுகளைப் பெற்றவர்களே அந்த திரைப்படத்தைப் பார்க்க முடியாது. அவர்களது சந்ததியினர் 2115-இல் நடைபெறும் பிரீமியரில் கலந்துகொள்ளும் வகையில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 100 வருடத்தில் இப்போது 11 வருடத்தை கடந்துவிட்டோம், இன்னும் 89 வருடங்கள் கழித்து இந்தப் படத்தை யார் பார்க்கப்போகிறார்கள் என்பது தெரியவரும்.

