ஆபத்துக்கு வித்திடுமா?- திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஆபத்துக்கு வித்திடுமா?- திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கு வலுக்கும் எதிர்ப்பு
ஆபத்துக்கு வித்திடுமா?- திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கு வலுக்கும் எதிர்ப்பு

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை தமிழக அரசு அனுமதியளித்த நிலையில், திரையுலகிலும் மருத்துவ துறை சார்ந்து எதிர்ப்புகள் வலுத்துள்ளது கவனத்துக்குரியது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு திரையரங்குகளுக்கு அனுமதி அளித்தபோதும், கோரோனா தாக்கத்தால் தமிழக அரசு தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் பலமுறை திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தபோதும், திரையரங்குகளைத் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி தரவில்லை.

பின்னர், கொரோனா பரவல் குறையத் தொடங்கியதும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல், 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாகவும், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகததாலும், பெரியதளவில் மக்கள் திரையரங்கிற்கு வரவில்லை.

இதனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ஜனவரி 13 வெளியாக இருக்கும் 'மாஸ்டர்' படத்தை வைத்து மீண்டும் ரசிகர்களை திரையரங்கிற்குள் கொண்டு வர திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டனர். இதனிடையே, சிலம்பரசனின் ’ஈஸ்வரன்’ படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அப்படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேரில் சந்தித்து, திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். சிலம்பரனும் அதே கோரிக்கையை முன்வைத்து அறிக்கை வெளியிட்டார். இந்தப் பின்னணியில், திரையங்கில் 100 சதவீத பார்வையார்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது.

இதற்கு தமிழ் திரையுலக பிரபலங்களான சிவகார்த்திகேயன், குஷ்பூ சுந்தர், சிலம்பரசன், ராதிகா சரத்குமார், ஹரிஷ் கல்யாண் உட்பட பலர் தங்களது நன்றியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “இந்த நேரத்தில் 100 சதவீத பார்வையாளர்களைவிட 50 சதவீத பார்வையாளர்கள் இருப்பதே சிறந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

அதே சமயம், மருத்துவர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் என்பவரும் இந்த அறிவிப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் “திரையரங்குகளில் மீண்டும் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலைக்கு நிகரானது. சிலருடைய சுய நலத்திற்காகவும், பேராசைக்காகவும் நாங்கள் பலியாக முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரியும்  “இந்த முடிவு மிகவும் ஆபத்தானது. ஆகையால் இந்த முடிவை முதல்வர் நடிகர்கள், விநியோகஸ்தர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்”  எனக் கூறியுள்ளார். 

இதனிடையே, திரையரங்கம் போன்ற மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனா தொற்று வெடித்து பரவுவதற்கு நாமே ஏற்பாடு செய்தது போன்றதாகும் என்று பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் கவனத்துக்குரிய கருத்தை முன்வைத்திருக்கிறார்.

இந்த எதிர்ப்பு குரலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்சன்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் சூழலில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை அனுமதிப்பதற்கு எதிரான குரல்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com