“பேட்டக்காரனுக்கு அநியாயம் இழைக்கப்பட்டதா?”- வெற்றிமாறன் ஏன் கருப்பு பக்கம் நின்றார்?

“பேட்டக்காரனுக்கு அநியாயம் இழைக்கப்பட்டதா?”- வெற்றிமாறன் ஏன் கருப்பு பக்கம் நின்றார்?
“பேட்டக்காரனுக்கு அநியாயம் இழைக்கப்பட்டதா?”- வெற்றிமாறன் ஏன் கருப்பு பக்கம் நின்றார்?

கருப்பின் சேவல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அத்தனை சேவல்களையும் களத்தில் சம்பவம் செய்து கொண்டிருக்கும். கருப்பு-இன் சேவலை தோற்கடிப்பதன் மூலம் பேட்டக்காரன் உடனான 30 வருட கணக்கை எப்படியாவது தீர்த்துவிடலாம் என ரத்தினசாமி என்னென்னவோ செய்துபார்ப்பார். கருப்பு வெற்றிக்கொடி நாட்டி பேட்டக்காரனின் உண்மையான வாரிசு என்பதை மெய்ப்பித்திருப்பான். பேட்டக்காரன் பார்ட்டியை சேர்ந்த அத்தனை பேரும் கொண்டாட்ட மனநிலையில் களிப்பின் உச்சத்தில் இருப்பார்கள். ஒருவரை தவிர. அவர் யாருமல்ல பேட்டக்காரனே தான். ஆம், அவர் அந்த கணத்தில் இருந்து தன்னுடைய நிம்மதியை இழந்திருப்பார்.

தோல்விக்கு பின் ரத்தினசாமி சொல்லும் வார்த்தையே பேட்டக்காரனின் உளவியலை துல்லியமாக சொல்லியிருக்கும். தோல்விக்கு பதிலாக நாம் ஏதாவது பேட்டக்காரனை ஏதாச்சும் செய்யணும் என்று ஒருவர் கேட்கும் போது இனி நாம் எதுவும் செய்ய தேவையில்லை. தன் வார்த்தை பொய்த்துவிட்டது என்ற எண்ணமே இனி அவரை கொன்றுவிடும் என்பது போல் சொல்லியிருப்பார். இந்த இடத்தில் இருந்து ஆடுகளம் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கும். ஒரு இயக்குநர் தன்னுடைய கதையில் உள்ள ஒரு கதாபாத்திரத்தின் மனதுடைய உளவியலையும், அதன் இயங்குதன்மையையும் எந்த அளவிற்கு துல்லியமாக பிரதிபலிக்க முடியும் என்பதற்கு பேட்டக்காரனின் உளவியலை வெற்றிமாறன் கையாண்ட விதமே சிறந்த எடுக்காட்டாகும். ஆனால், அதில் ஒரு பிரச்னையும் இருக்கிறது.

இந்த கதையில் வெற்றிமாறனுக்கு ஒரு கேள்வியை முன் வைப்பதற்காகவே இந்த சிறிய பகுப்பாய்வை மேற்கொள்ளலாம். ஒரு வாத்தியாராக பேட்டக்காரன் கதாபாத்திரத்திற்கு அவர் நியாயம் சேர்ந்த்திருக்கிறாரா? இல்லை அந்த கதாபாத்திரத்திற்கு அநியாயம் இழைக்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்விகள் இந்த இங்கு நாம் முன் வைக்க உள்ளது. இதற்கு ஒரு ஒப்புமைக்காக சார்பாட்டா பரம்பரை படத்தின் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் ரஞ்சித் நியாயம் சேர்த்தாரா என்பதோடு பொறுத்திப் பார்க்கலாம்.

ஒரு சமூகம் தான் ஒரு கலைப் படைப்பிற்கான ஆதாரம். சமூகத்தில் உலாவிக் கொண்டிருக்கும் மனிதர்கள்தான் ஒரு கலைப் படைப்பின் மாந்தர்களாக மாறுகிறார்கள். இயக்குநர் கற்பனை வளம் அந்த கதாபாத்திரங்களை வளர்த்து தனக்கேற்ற திசையில் பயணிக்க வைக்கிறார். இதில் முக்கியமானது என்னவென்றால் அந்த சமூகத்தை ஆழமாக புரிந்து கொண்டால் மட்டுமே, அங்கு பிறந்து வளர்ந்த கதாமாந்தர்களின் உளவியலை கச்சிதமாக கதையில் வார்த்தெடுக்க முடியும். ஏனெனில் தனி மனிதர்கள் சமூகத்தின் வார்ப்புகளே. பேட்டக்காரனும், ரத்தினசாமியும், கருப்பும், துரையும் மதுரை மண்ணின் வார்ப்புகள். அந்த மண்ணிற்கு என்று ஒரு சமூக உளவியல் இருக்கிறது. அங்கு போட்டி என்பது வெறும் போட்டி அல்ல. அது ஒரு கவுரவப் பிரச்னை. ஒரு போட்டி கவுரவத்திற்காக நடத்தப்படும் போது அதன் தன்மை முற்றிலும் மாறிவிடுகிறது. சாகும் தருவாயில் இருக்கும்போது கூட தன்னுடைய கடைசி ஆசையாக சேவல் போட்டியில் பேட்டக்காரனை தோற்கடிக்க வேண்டும் என்றுதான் ரத்தினசாமியின் அம்மா கேட்கிறார். இது சரியா, தவறா என்பது வேறு விவாதம். ஆனால், அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தன் தாயின் கடைசி ஆசைக்காகவே எப்படியாவது பேட்டைக்காரனை சேவல் சண்டையில் வெற்றிபெற வேண்டும் என்ற வெறியில் எல்லாவற்றையும் செய்வார்.

இங்கு நாம் பார்க்கவிருப்பது பேட்டக்காரன் - கருப்பு இடையிலான உறவு குறித்து. பேட்டக்காரன் ஒரு ஆலமரம். விதையாய் மண்ணில் விழுந்து வளர்ந்து சேவல் வித்தையில் கரை தேர்ந்து வெல்ல முடியா உச்சத்தில் இருக்கிறார். அவன் சேவல் வளர்க்கும் வித்தைதான் அந்த வெற்றிகளின் ரகசியம். ஒரு சேவலை பார்த்த சிறிது நேரத்தில் அதன் சண்டையிடும் வலிமையை கணிப்பதில் நுட்பம் கொண்டவர். கருப்பு பேட்டைக்காரனின் கைதேர்ந்த சிஷ்யன். சேவல் சண்டையின் உண்மை விசுவாசி. பேட்டைக்காரனே கதி என்று கிடப்பவன்.

எந்த இடத்தில் இருந்து சிக்கல் ஆரம்பிக்கிறது. பேட்டக்காரன் தோற்றுவிடும் என்று சொன்ன ஒரு சேவல் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறது. அப்படியென்றால் அவர் தவறாக கணித்து இருக்கிறான் என்ற எண்ணம் சுற்றியிருப்பவர்கள் மனதில் தோன்றிவிடுகிறது. இதனை அவரை சுற்றியிருப்பவர்களே குத்திக்காட்டும்படி வார்த்தைகளை விட்டுவிடுகிறார்கள். இந்த இடத்தில் இருந்துதான் அவர் மனதில் பிரளயமே உருவாகி மாற்றங்களை நோக்கி செல்கிறது. அந்த இரவு நேரத்தில் பேட்டக்காரன் வருந்தும் காட்சி மிகவும் க்ளாசிக் ஆன ஒன்று. இனிமே தன்னால் உன்னை நல்லா பார்த்துக் கொள்ள முடியாது என தன்னுடைய இளம் வயது மனைவியிடம் மனம் வெதும்பி சொல்வதே அவரது உளவியல் எப்படி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அடுத்தடுத்து பேட்டைக்காரன் நடந்து கொள்ளும் விதத்தை வைத்துதான் படம் நகர்கிறது. நமக்கும் பேட்டக்காரன் குறித்த எதிர்மறை எண்ணம் துளிர்விட ஆரம்பிக்கிறது. இறுதியில் அவருடைய கதாபாத்திரம் குற்ற உணர்ச்சியில் தன்னையே மாய்த்துக் கொள்கிறது. இது அந்த கதாபாத்திரத்திற்கு இயக்குநர் கொடுத்திருக்கும் முடிவு. இது உண்மையில் நியாயமானதா?

உண்மையில் தப்பு எங்கிருந்து தொடங்குகிறது. பெண்ணின் பின்னால் சுற்றிவிட்டு சரியான பயிற்சி கொடுக்காமல் பேட்டக்காரன் முன்பு சேவலை கொண்டு கருப்பு நிறுத்திய இடத்தில் இருந்துதான் தவறு தொடங்குகிறது. பின், தான் வளர்க்கும் சேவல் மீது இருக்கும் நம்பிக்கையில் அதன் எதிர்வினைகளைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் களமாடுகிறான். ஒரு பொழுதும் தன் வாத்தியாரின் மன உளவியல் சந்திக்கும் சிக்கல்களை அவன் புரிந்து கொள்ளவே இல்லை. பிரச்னையே அங்குதான் எழுகிறது. தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்ற விரக்திதான் பேட்டக்காரனை உச்சபட்ச மன சிதைவுக்கு தள்ளுகிறது. பேட்டக்காரன் கதாபாத்திரம் எதிர்மறையை நோக்கி கொண்டு செல்லப்பட்டு முடித்து வைக்கப்படுகிறது. கதை கருப்பின் பார்வையில் நகர்த்தப்பட்டு அவர் மீது களங்கமில்லாமல் முடித்துவைக்கப்படுகிறது. உண்மையில் கதை திடீரென்று முடிகிறது.

இதில், பேட்டைக்காரன், கருப்பு இருவரது கதாபாத்திரங்களில் ஒரு ஹீரோ என்ற அடிப்படையில் கருப்பு கதாபாத்திரத்திற்கு இயக்குநர் முன்னுரிமை கொடுத்ததே இங்கு பிரச்னையாக உள்ளது. ஆடுகளம் கதையின் ஆன்மாவே பேட்டைக்காரன் தான். அவர் திசை மாறியதற்கான சூழ்நிலைகள் சரியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அது அதன் போக்கில் நகர்த்தப்படுகிறது. எல்லோரும் சேர்ந்து நெருக்கும் போது அவர் தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு ஆட்படுகிறார். அவருடைய பலமே தன் சிஷ்யன்களின் உளவியலை நன்கு உணர்ந்திருந்ததுதான். அதனை கடைசியில் தவறான வழிக்கு பயன்படுத்திவிடுகிறார். இயக்குநர் நினைத்திருந்தால் அவர் தன்னுடைய தவறை உணர வைத்திருக்க முடியும். அதனை அவர் செய்யவில்லை. அது தவறும் இல்லை. ஆனால், அதிக தவறுகளை செய்தது கருப்பு கதாபாத்திரம் தான். அவன் ஒரு போதும் தன் வாத்தியாரின் மனநிலையில் ஏற்பட்டுக் கொண்டிருந்த எந்த மாற்றத்தையும் கணிக்கவே இல்லை. அதற்கு அவன் முயற்சிக்கவே இல்லை. அவர் தொழில் தொடங்குவதிலேயே குறிக்கோளாய் இருக்கிறான். இயக்குநர் உண்மையாக இருந்திருந்தால் கருப்பையும் எதிர்மறையாகவே முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் தன் தவறை கருப்பு உணர்வதுபோலாவது காட்சிப்படுத்தி இருக்க வேண்டும். பேட்டக்காரனின் கவுரவத்தை காப்பாற்றவே அவர் ஊரைவிட்டு போவதாக படத்தை இயக்குநர் முடித்து இருப்பார்.

இந்த சூழலின் தன்மையை புரிந்து கொள்ள சற்றே சார்பட்டா பரம்பரை படத்தில் வாத்தியாருக்கும் சிஷ்யனுக்கும் இடையிலான உறவு எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பதுடன் பொறுத்தி பார்க்கலாம். ஆடுகளத்திற்கு எப்படி பேட்டக்காரனோ அப்படித்தான் சார்பட்டாவுக்கு ரங்கன் வாத்தியார்தான் ஆன்மா. வேம்புலி உடனான சண்டைக்காட்சிகள் வரை அந்த கதையை தாங்கி பிடித்திருப்பவர் அவர்தான். ஆனால், பின்னர் கபிலனின் வாழ்க்கைப் போக்கில் கதை நகரும். இதுதான் ஹீரோவுக்காக கதை மாறும் தருணம். தான் மீண்டும் சண்டையிட விரும்புவதாக கபிலன் வைக்கும் கோரிக்கையை ரங்கன் வாத்தியார் நிராகரித்துவிடுவார். அந்த இடத்தில் அவர் ஏன் நிராகரித்தார் என்பதற்கான நியாயங்களை சரியாக உணர்த்தப்படவில்லை.

ரங்கன் வாத்தியார் எந்த அளவிற்கு தன்னுடைய பாக்ஸிங் கலைக்கு நியாயமாக நடந்து கொள்பவர் என்றால், தன்னுடைய மகனாக இருந்தாலும் வேம்புலியை அடிக்க கபிலன் தான் சரியான ஆள் என்று அவர் தேர்வு செய்கிறார். தன்னுடைய ரத்த உறவை தாண்டி திறமையை பிரதானமாக நினைக்கிறார். அதே அடிப்படையில் தான் கபிலன் வாழ்க்கை திசைமாறியதையும் உடல் தகுதியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவனை நிராகரிக்கிறார். கபிலனும் தன் வாத்தியாரை ஆத்மார்த்தமாக நம்புகிறவன் தான். ஆனால், தன் வாத்தியார் ஏன் நிராகரிக்கிறார் என்பதை அவர் உணர்வது போல் காட்சிப்படுத்தவில்லை. சிஷ்யனை நோக்கியே கதை முடிக்கப்பட்டிருக்கும். முடிவில் ஹீரோ என்பதால் கபிலனே நம் மனதில் நிற்பார். ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக முடித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள இந்த ஒப்புமை நூறு சதவீதம் பொருந்தவில்லை என்றாலும், இரண்டிற்கு சில பொருத்தங்கள் நிச்சயம் உண்டு. வாத்தியார்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் தன்னுடைய வாழ்க்கையையே தான் விரும்பிய ஒன்றிற்காக ஒப்படைத்து விடுகிறார்கள். அதுதான் அவர்களது உலகம். அவர்களை இன்னும் நாம் கூடுதலாக கொண்டாட வேண்டும். கருப்புகளை உருவாக்கிய பேட்டக்காரன்கள் இன்னும் போற்றப்பட வேண்டும்.

வெற்றிமாறனின் கதைமாந்தர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர் உருவாக்கிய கதை மாந்தர்கள் நீண்ட நாட்கள் நம்மோடு நிறைந்து இருப்பார்கள். அன்பு, கருப்பு மட்டுமல்ல. ராஜனும், பேட்டைக்காரனும் தான். இந்த கதாபாத்திரங்களை உருவாக்கிய அந்த கலைஞனுக்கு இன்று பிறந்தநாள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெற்றிமாறன்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com