வியட்நாம் படத்தை இயக்கும் பீட்டர் ஹெயின்! பொங்கல் வெளியீடு
சினிமாத்துறையில் மிகவும் கடினமான பிரிவு என்றால் அது சண்டைக் காட்சிகளை உருவாக்கும் ஸ்டண்ட் பிரிவுதான். தமிழ் சினிமா பலப்பல சண்டைக் காட்சி இயக்குநர்களைக் கண்டுள்ளது என்றாலும் கூட ஜாக்குவார் தங்கம், சூப்பர் சுப்பராயன், கனல் கண்ணன் போன்ற வெகு சிலரது பெயர்கள்தான் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளன. அவ்வரிசையில் பீட்டர் ஹெயினுக்கு சிறப்பு இடம் உண்டு. ஸ்டண்ட் காட்சிகளை உலகத்தரத்திற்கு கொண்டு சென்ற வெகுசில ஸ்டண்ட் இயக்குநர்களில் ஒருவர் பீட்டர் ஹெயின்.
இவரது தாத்தா தொழில் காரணமாக வியட்நாமில் குடியேறினார். வியட்நாமைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டவருக்கு அங்கேயே குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு பெருமாள் என பெயர் சூட்டி வளர்க்கின்றனர். மகன் பெருமாளும் ஒரு வியட்நாம் பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறார் அவர் பெயர் மேரி. மேரிக்கும் பெருமாளுக்கும் மகனாகப் பிறந்தவர் தான் பின்னாளில் தமிழ் சினிமாவில் அதிரடி ஆட்டம் காட்டிய பீட்டர் ஹெயின்.
பீட்டர் ஹெயின் காரைக்கால் அருகில் உள்ள ஒரு ஊரில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. பீட்டரின் அப்பா ஒரு ஸ்டண்ட் மேன். 90களில் விஜயகாந்த் நடித்த ஒரு சினிமா மலேசியாவில் படம் பிடிக்கப்படுகிறது. அந்த சண்டைக்காட்சிக்கு மங்கோலிய முகம் கொண்ட ஒருவர் தேவைப்படுகிறார். எனவே பெருமாள் தன் மகன் பீட்டர் ஹெயினை அக்காட்சியில் பயன்படுத்த அழைத்துச் செல்கிறார். பெருமாள் எனும் புலிக்குப் பிறந்த பீட்டர் குட்டி அதன் பிறகு இந்திய சினிமாவில் 16 அடி பாய்ந்தது.
பீட்டர் ஹெயினின் முதல்படம் மின்னலே. அதிலிருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். முதல்வன் படத்தில் அர்ஜூன் உடலில் நெருப்பு வைக்கும் காட்சியினை முதலில் படம் பிடித்துப் பார்த்தபோது அது அவ்வளவு திருப்தியாக வரவில்லையாம். பிறகு பீட்டர் ஹெயின் தன் உடலில் ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு உடலை எரித்துக் கொண்டு அந்த காட்சியில் அர்ஜூனுக்கு டூப்பாக நடித்தார். அந்தக் காட்சி மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியது என்றாலும், அதற்கு விலையாக பீட்டர் ஹெயின் கொஞ்சம் தீக்காயங்களைப் பெற வேண்டியிருந்தது.
ரன் திரைப்படத்தில் பீட்டர் ஹெயினால் சரியாக சண்டைக் காட்சியை உருவாக்க முடியவில்லை என அதன் சினிமாட்டோகிராபர் ஜீவா கோபித்துக் கொண்டாராம். பிறகு பாதாள நடைபாதையில் மாதவன் ஷட்டரை மூடும் காட்சியை திரையிட்டுப் பார்த்த போது அனைவரும் அசந்து போயிருக்கிறார்கள். இப்படியாக பீட்டர் ஹெயினின் அவுட்புட் எப்போதும் உரக்கவே பேசி இருக்கிறது. இதுகுறித்து பீட்டர் ஹெயினின் அம்மா மேரி ஒரு பேட்டியில் கூறும் போது “என் மகனோட திறமை என்னனு, அவனோட வேலையே சொல்லும்” என்றார்.
புலிமுருகன் படத்திற்காக தேசியவிருது, அந்நியன் படத்திற்காக பிலிம் பேர் விருது, கஜினி திரைப்படத்திற்காக மற்றுமொரு பிலிம் பேர் விருது என பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தார் பீட்டர் ஹெயின். ஸ்டண்ட் இயக்குநராக மட்டுமே அறியப்பட்ட பீட்டர் ஹெயின் தற்போது வியட்நாம் மொழியில் திரைப்படமொன்றை இயக்கி இருக்கிறார்.
Sam hoi என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தன. அடுத்த வருடம் ஜனவரி 15ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது. குத்துச்சண்டையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படம் நிச்சயம் பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டண்ட் இயக்குநராக இந்திய அளவில் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் பணியாற்றிய பீட்டர் ஹெயின் தற்போது கடல் தாண்டி வியட்நாம் மொழியில் திரைப்பட இயக்குநராக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்.