”பொன்னியின் செல்வி..!” - கல்கியின் சிறந்த கற்பனை கதாபாத்திரம் ’பேரழகி’ நந்தினிதான்! ஏன்..?

”பொன்னியின் செல்வி..!” - கல்கியின் சிறந்த கற்பனை கதாபாத்திரம் ’பேரழகி’ நந்தினிதான்! ஏன்..?
”பொன்னியின் செல்வி..!” - கல்கியின் சிறந்த கற்பனை கதாபாத்திரம் ’பேரழகி’ நந்தினிதான்! ஏன்..?

நூறாண்டு வரலாறு கொண்ட சோழப் பேரரசை, பாண்டிய அரசனை வெட்டி வீழ்த்தி ஈடு இணையற்ற பலத்தோடு தனது பொற்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அந்த பேரரசை ஒரு இளம்பெண் மடைமாற்றினார்! தடுத்து நிறுத்தினார். கிட்டத்தட்ட அனைத்து அரச குலத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஏற்க மறுக்கிறதா மனம்!? கவலை வேண்டாம்! நீங்கள் பொன்னியின் செல்வன் நாவலை முன்பே படித்திருந்தால் அல்லது இனி அதன் திரைமொழியான “பொன்னியின் செல்வன்” படத்தை பார்க்கும்போது மேற்சொன்ன வரிகளை உங்கள் மனம் நெருடலில்லாமல் முழுமையாக ஏற்கும். பேரழகியான நந்தினியின் நயவஞ்சகத்தால் சோழப் பேரரசு தடம் புரண்டதை உள்ளது உள்ளபடி உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும். அப்படி கதையில் என்ன மாற்றத்தை செய்து விட்டார் நந்தினி? வாருங்கள் பார்ப்போம்!

ஒற்றை நாழிகையில் ஒரு பேரரசை வீழ்த்தும் நயவஞ்சகம்!

நந்தினிக்கு இணையான அழகில் நாவலில் வேறு யாரையும் ஒப்பிட்டு இருக்க மாட்டார் கல்கி. அவ்வாறான ஒரு சூழல் கூட நாவலில் வராதவாறு தான் எழுதியிருப்பார். நந்தினியைப் பார்க்க ஒரு ஆண்மகன் செல்கிறாரா? அவனது நோக்கம் என்னவாக வேண்டுமானால் இருக்கட்டும். நந்தினியிடம் ஒரு நாழிகை பேசிவிட்டு திரும்பும்போது நந்தினி என்ன சொன்னாரோ அதை செய்யும் வேட்கையோடு திரும்புவான். அது தனது நோக்கத்திற்கு நேரெதிரான விஷயமாக இருந்தாலும் சரி! நந்தினி சொன்னார்! நான் அதை செய்வேன்! என்ற மனநிலைக்கு மாறியிருப்பான். இது பதின் பிராயத்தில் இருக்கும் இளைஞன் முதல் பற்கள் விழுந்து பொக்கை வாயாக தயாராகி கொண்டிருக்கும் பழுவேட்டரையர் வரை! அனைவருக்கும் இது பொருந்தும்! ஆம்! நாவலில் யார் யாரெல்லாம் நந்தினியிடம் வீழ்ந்தார்கள் என்று நீங்கள் எண்ணத் துவங்கினால், அந்த எண்ணிக்கை நாவலின் மொத்த கதாபாத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏறக்குறைய சமமாக வந்து நிற்கும்!

யாரை எவ்வாறு வீழ்த்தினால் அது தமக்கு சாதகம் என்பதை நந்தினியை தவிர வேறு யாராலும் அவ்வளவு துல்லியமாக நாவலில் கணிக்க முடியுமா? முதுமையின் நிழலில் இளைப்பாற வேண்டிய பழுவேட்டரையரை தம் மீது மோகம் கொள்ளச் செய்து, அவரை அவரது பிரியத்துக்கு உரிய சுந்தர சோழருக்கு எதிராக திருப்ப பழுவூர் ராணி நந்தினிக்கு ஒருநாள் கூட ஆகியிருக்காது. சாமியாராகி சிவதொண்டு செய்யப் போகிறேன் என்று கிளம்பிக் கொண்டிருந்த மதுராந்தகனை, அந்த சுந்தர சோழரை தூக்கி வீசுங்கள்! அந்த சிம்மாசனம் என்னுடையது! என்று சொல்ல வைக்க நந்தினிக்கு தேவைப்பட்ட கால அவகாசம்! வெறும் ஒற்றை நாழிகைதான்! ஆதித்த கரிகாலனது ஆருயிர் நண்பனான பார்த்திபனை தனது காலடியில் விழ வைக்க நந்தினி பெரிய சிரத்தையெல்லாம் மேற்கொண்டிருக்க மாட்டார்! ஓரிரு வார்த்தைகளை கொஞ்சல் மொழியில் பேசியிருப்பார்! அவ்வளவுதான்! இனி ஆதித்த கரிகாலன் என் நண்பன் இல்லை என்று அறிவித்து விடுவான் பல்லவ இளவரசன் பார்த்திபன்.

கரிகாலனை கலங்கடித்த அந்த ஏக்கப் பார்வை:

நாவலின் ஒரு கட்டத்தில் சோழப் பேரரசின் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் நந்தினி மீது காதல் கொள்வார். அப்போது தான் பாண்டிய நாட்டின்மீது சோழப் பேரரசு தனது இறுதி யுத்தத்தை தீவீரமாக முன்னெடுத்து கொண்டிருக்கும். போர் பூமியில் ஒரு வீட்டில் பாண்டிய மன்னன் வீர பாண்டியனுக்கு அடைக்கலம் அளித்து அவனுக்கு நந்தினி பணிவிடை பார்க்கும் காட்சியை பார்த்து அதிர்ந்து போவார் ஆதித்த கரிகாலன். பாண்டிய மன்னனுக்கும் நந்தினிக்கும் முக்கிய தொடர்பு இருக்குமா என்பதை யோசித்தவாறே வீரபாண்டியன் தலையை வெட்டிச் சாய்ப்பார் கரிகாலன். ரத்தத்துடன் சேர்ந்து அந்த அறையில் கண்ணீரும் வெள்ளமாக பெருக்கெடுத்து இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் நந்தினி கண்ணீர் சிந்தியிருக்க மாட்டார்! கதறி அழுதிருக்க மாட்டார்! ஆனால் கரிகாலனை வெறித்துப் பார்ப்பார்! ஓர் ஏக்கப் பார்வை! “வீர பாண்டியன் தலை கொய்த கோப்பரகேசரி” என்று தேசமே தலைமேல் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்க, அந்த பார்வையின் அர்த்தம் என்ன என்பது புரியாமல் கலங்கிப் போயிருப்பார் கரிகாலன். அந்த ஏக்கப் பார்வையை மீண்டும் பார்க்கவே கூடாது என்று எண்ணுவார் கரிகாலன். ஆனால் அவரது எண்ணம் ஈடேறாது! கடைசியில் அந்த பார்வைதான் அவரது உயிருக்கே எமனாக வந்து நிற்கும்!

வந்தியத்தேவனை மட்டும் ஏன் நந்தினி விட்டுவைத்தார்?

முன்னரே சொன்ன ஒன்றை மீண்டும் குறிப்பிடுகிறோம்! நாவலில் யார் யாரெல்லாம் நந்தினியிடம் வீழ்ந்தார்கள் என்று நீங்கள் எண்ணத் துவங்கினால், அந்த எண்ணிக்கை நாவலின் மொத்த கதாபாத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏறக்குறைய சமமாக வந்து நிற்கும்! அப்படியென்றால் நந்தினியிடம் வீழாதவர்களே இல்லையா என்று கேட்டால் உண்டு! முக்கியமான ஒரு கதாபாத்திரம் நந்தினிக்கே டிமிக்கி கொடுத்து நகர்ந்திருக்கும். ஏகப்பட்ட முறை நந்தினி தனது வலையை விரிக்கும் போதெல்லாம் சாதுர்யமாக, நந்தினியே ரசிக்கும் வண்ணம் தப்பிச் சென்றுவிடும் அந்த கதாபாத்திரம்! அது வேறு யாருமல்ல! வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தான் அது!

ஆழ்வார்க்கடியான் நம்பி கொடுத்த எச்சரிக்கையை சரியாகப் புரிந்து, நயவஞ்சகத்தோடு நந்தினி உதிர்க்கும் வார்த்தைகளின் உள்ளார்ந்த பொருளையும் உணர்ந்து வந்தியத்தேவன் செயல்படுவான். எனக்கு சேவகனாய் இருப்பாயா? என்று நந்தினி தனியறையில் வைத்து கேட்கும்போது, நான் குந்தவைக்கு அல்லவா சேவகனாக இருப்பேன்! என்று முகத்தில் அடித்தாற் போல சொல்லிவிடுவார் வந்தியத்தேவன்! இத்தனைக்கும் அவர் இந்த காட்சிக்கு முன் குந்தவையிடம் ஒரு வார்த்தைக் கூட பேசியிருக்க மாட்டார்! இவ்வாறு அத்தனை தருணங்களிலும் தனக்கு டிமிக்கி கொடுத்த வந்தியத்தேவனைப் பற்றி தன் மனதில் இருக்கும் எண்ணங்களை எல்லாம் மனம் திறந்து மணிமேகலையிடம் சொல்வாள் நந்தினி. மணிமேகலைக்கு வந்தியத்தேவன் மீது தீராக்காதல் வர அதுவும் மிக முக்கிய காரணமாக அமையும்!

கல்கியின் தலைசிறந்த கற்பனைக் கதாபாத்திரம் நந்தினிதான்! நந்தினி மட்டும்தான்! 

நாவலை ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் இந்த “நந்தினி” கதாபாத்திரம் உண்மையில் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் தற்போது வரை கிடைக்கவில்லை. இந்த பாத்திரம் கல்கி தனது கற்பனையில் உருவாக்கி உயிர்கொடுத்த பாத்திரம்! கல்கி உருவாக்கிய தலைசிறந்த கற்பனைக் கதாபாத்திரம் நந்தினிதான்! நந்தினி மட்டும்தான் என்று அடித்துச் சொல்லுமளவு நாவலை தன் கரங்களில் தாங்கி நிற்கும் கதாபாத்திரம் அது! நாவல் நிறைவு பெறும்போது கரிகாலன் மட்டுமல்ல, நாமும் நந்தினியிடம் வீழ்ந்திருப்போம்! நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்த நாவலுக்கு “பொன்னியின் செல்வி” என்று கூட பெயரிட்டு இருக்கலாம் என்று சொல்வார். அந்த பொன்னியின் செல்வி வேறு யாருமல்ல! நந்தினிதான்! அந்த பாத்திர வார்ப்புதான் கதையை நாவலில் தாங்கி நிற்கும்! திரைப்படத்தில் எவ்வாறு அதைக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! இன்னும் இரு தினங்கள் மட்டுமே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com