சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய அன்றைய நாள் ! இது நசீரின் கதை...!
கடந்த ஒரு வாரமாகவே இணையதளம் மூலம் நடந்துகொண்டிருக்கும் We Are One சர்வதேச திரைப்படவிழாவில் அருண் கார்த்திக் இயக்கிய நசீர் எனும் தமிழ்மொழித் திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது.
கொரோனா யுத்தம் துவங்கியது முதலே நாம் நமது பல்வேறு வேலைகளை வீட்டில் இருந்தே செய்து கொண்டிருக்கிறோம். அது போலவே திரைப்பட விழாக்கள் பலவும் கூட இணைய தளம் மூலம் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் We are one மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் நசீர் என்ற தமிழ் மொழி திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது. இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு youtube’ல் துவங்கிய திரையிடல் சுமார் 8:30 க்கு நிறைவடைந்தது.
We are one சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இந்திய திரைப்படங்களில் நசீரும் ஒன்று. தேர்வான மற்றொரு திரைப்படமான EEb allay ooo திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் ஆச்சர்யம்.
அரசியல் ஆதாயங்களுக்காக அநியாயமாக பலியாக்கப்படும் சாமானியனின் கதை தான் நசீர். 90களில் கோவை நகரத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள்., அதன் பின்பு கோவை நகரம் சந்தித்த முக்கியப் பிரச்னைகள் இவற்றை மையமாக கொண்டு இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் அருண் கார்த்திக்.
இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களின் வாழ்வியலை மலையாள சினிமாக்கள் பதிவு செய்த அளவிற்கு தமிழ் சினிமாக்கள் நேர்மையானதாக பதிவு செய்திருக்கிறதா என்று நீங்கள் யோசித்துப்பார்த்தால் அதற்கான விடையாக இந்த நசீர் இருக்கும்.வெறும் பரபரப்புகளுக்காக கதாப்பாத்திரங்களை உலவ விடாமல் நடுத்தர வர்க்கத்து இஸ்லாமிய இளைஞனின் ஒரு நாள் வாழ்வியலை எந்த சமரசமும் இன்றி பதிவு செய்திருக்கிறார்கள்.
முதுமையின் நாள்களை நகர்த்தும் அம்மா, மாற்றுத் திறனாளி வளர்ப்பு மகனான இக்பால் மற்றும் அன்பு மனைவி என பலரையும் போலவே வாழ்க்கையின் விடியலுக்காக காத்திருக்கும் நசீர் தான் இக் கதையின் நாயகன். கோவையிலுள்ள ஜவுளிக்கடையொன்றில் வேலை செய்யும் நசீர், அன்றைய தினத்தின் காலைப்பேருந்தில் வெளியூர் செல்ல புறப்படும் தனது மனைவியை கோவைப் பேருந்து நிலையத்திலிருந்து வழியனுப்பிவிட்டு தான் வேலை செய்யும் ஜவுளிக்கடைக்கு வருகிறார். நசீரின் வழக்கமான ஒரு நாளைப் போலவே முடிந்திருக்க வேண்டிய அந்த நாள் எப்படி துயரமாக முடிந்தது என்பதை வலிந்து திணிக்காமல் கதையின் போக்கிலேயே சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர் அருண் கார்த்திக்.
எழுத்தாளர் திலிப் குமார் எழுதிய “ஒரு குமாஸ்தாவின் கதை” என்ற சிறுகதையினை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் நிறையவே நிகழ்கால அரசியலை உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறது. இக்கதையின் நாயகனாக நடித்திருப்பவர் குமாரானே வலவானே, இவருடன் சுதா ரங்கநாதன், யாஸ்மின் ரஹ்மான், கவிஞர் விக்ரமாதித்யன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் பங்களித்திருக்கின்றனர்.
இயக்குநர் அருண் கார்த்திக் சற்றும் சமரசமின்றி இப்படத்திற்கான திரைக்கதையினையும் வசனங்களையும் எழுதியிருக்கிறார். ஒரே நாளில் நடக்கும் கதை இது என்பது ஒரு புறம்., ஆனால் ஒரே நாளில் படம் பிடிக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வை இந்த சினிமா கொடுக்கிறது என்பது தான் குறிப்பிட வேண்டிய விசயம். பெரும்பான்மையாக இயற்கை ஒளியை மட்டுமே பயன்படுத்தி அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சவ்மியானந்தா சாய். இளையராஜாவின் பாடலும் கஷல் இசையும் ஒலிக்கும் காட்சிகளில் மாற்றுத்திறனாளி சிறுவனின் காதுகளுக்குள் தொட்டி மீன்கள் நீந்துவது போல ஷாட் கம்போஸ் செய்திருப்பது காட்சிக் கவிதை. படத்தொகுப்பாளர் அர்கியா பாசு நல்ல கதை சொல்லியாக மிளிர்கிறார்.
இறுதி காட்சியில் சில்லுவண்டுகள் ரீங்காரமிடும் சத்தம் கேட்கிறது. நீண்டு ஒலிக்கும் அந்த சத்தம் நசீரின் மூச்சைப் போல ஒரு நொடியில் நின்று போகிறது. “பிரபஞ்சத்திற்கு நான் ஒரு நொடி, எனக்கு இந்த பிரபஞ்சம்...?” என கவிதை சொல்லி வானம் பாடியாக வாழ்ந்து வந்த நசீரின் குரல் நசுக்கப்படும்போது நம் ஒவ்வொருவரையும் நசீராக உணரவைத்ததில் மிளிர்கிறது மக்களுக்கான இந்த கலைப் படைப்பு. நம் நாட்டில் இப்படி எத்தனை எத்தனையோ நசீர்களின் நாள்கள் தினம் தினம் முடித்து வைக்கப்படுகிறது என்பது தான் துயரம்.
இன்று இரவு வரை அதாவது நேற்று மாலை 7:00 மணிக்கு இத்திரைப்படம் திரையிடப்பட்ட நேரத்திலிருந்து 24 மணி நேரம் வரை youtube தளத்தில் நசீரைப் பார்க்கலாம். உங்கள் 90 நிமிடங்களை தாராளமாக நசீருக்கு நீங்கள் செலவு செய்யலாம்.