“டிக்கெட் கிழிக்கிற மனோகரனுக்கு மரியாதை ஜாஸ்தி” வடசென்னையில் மூடப்படும் அகஸ்தியா தியேட்டர்

“டிக்கெட் கிழிக்கிற மனோகரனுக்கு மரியாதை ஜாஸ்தி” வடசென்னையில் மூடப்படும் அகஸ்தியா தியேட்டர்
“டிக்கெட் கிழிக்கிற மனோகரனுக்கு மரியாதை ஜாஸ்தி” வடசென்னையில் மூடப்படும் அகஸ்தியா தியேட்டர்

இன்றைய காலத்திலும் மக்களை மகிழ்வித்துக்கொண்டிருந்த வடசென்னையின் பழமையான சினிமா தியேட்டர் அகஸ்தியா செப்டம்பர் 1ம் தேதி முதல் தன் ஆட்டத்தை நிறுத்திக்கொள்கிறது என்ற செய்தி சினிமா காதலர்களை உருகவைத்திருக்கிறது. 1967ம் ஆண்டு 1004 இருக்கைகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தியேட்டருக்கு வயது 53. இதுபற்றி பத்திரிகையாளர் ந.பா. சேதுராமன், ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அந்தப் பதிவைப் படித்துப்பாருங்கள்…

“ஏற்கெனவே தங்கம், கிருஷ்ணா, கிரௌன், பிரபாத், ரீகல் (பத்மனாபா)னு பழமையான தியேட்டர்களை மூடியாச்சு, மிச்சமிருந்த ஒரே தியேட்டர் இதுதான். 1967-ல ரிலீசான பாமா விஜயம்தான் மொத படம். அப்புறம் கொஞ்சும் சலங்கை, சிவந்த மண், உலகம் சுற்றும் வாலிபன், ப்ரியான்னு ஹிட் அடிச்ச பல படங்களை 70 எம்.எம். ஸ்க்ரீன்ல காட்டுன தியேட்டர் இது.  வடசென்னையில 70 எம்.எம். ஸ்க்ரீன்ல படம் காட்டுன ஒரே தியேட்டரும் இதுதான்.

தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கிற மனோகரனுக்கு லோக்கல்ல இருந்த மரியாதை அப்ப ரொம்ப ஜாஸ்தி. ஒரு தெருவுக்குள்ள மனோகரன் நடந்துபோறார்ன்னா, பொதுமக்கள் அவருக்கு அவ்வளவு மரியாதை குடுப்பாங்க. அதே தியேட்டர்ல முருகர் போலவே  பட்டை அடிச்சிக்கிட்டு டிக்கெட் கிழிக்கற ’முருகன்’ற வரை யாருக்கும் தெரியாது. மரியாதை மனிதர் என்பதால், முருகன் எனக்கு நண்பரா இருந்தாரு. ரொம்ப நாணயஸ்தன்கறதால, அவரால ஒரு டிக்கெட்டுக்கு கூட எனக்கு பிரயோஜனமில்லங்கறது வேற !

மனோகரன புடிச்சா டிக்கெட் கிடச்சுடும்னு ராஜ்திலக்னு பேரை மாத்திக்கிட்ட நண்பன் கே.ஆர்.ஆறுமுகம் சொல்லவே அதுக்கு ரூட்டப் போட்டோம், வேதகிரி, சுகுமார், சேகர், சுலைமான், பாபுபாய், டேக்கா ரவி,டால்டா ரவி ( இந்த டால்டா ரவிதான் அண்மையில் பிள்ளைகளுக்கு காலேஜ் பீஸ் கட்ட வழி இல்லாமல், கடன் கேட்கவும் விரும்பாமல் தூக்கில் தொங்கிவிட்டான்), லாரன்ஸ்னு  எங்க டீம் ஒரு பக்கம்.  அதேபோல் எல். அன்பரசு, தங்கம், சிவா, எல். முத்துன்னு இன்னொரு டீம் ஒரு பக்கம்னு மனோகரன அப்ரோச் பண்ணோம்...

அந்த டீம் எப்படி அப்ரோச் பண்ணுச்சோன்னு தெரியல, அவங்களுக்கு டிக்கெட் கிடைக்கல... நாங்க கட்டையோட போயிருந்தோம், ‘மிரட்ட மட்டும்தான் சேது, வெளியே எடுத்துராதே’ன்னு ஒருத்தனும் சொல்லலே... மனோகரனுக்கு அன்னிக்கு கெட்ட காலம் போல... மொத்த டிக்கெட்டயும் என்கிட்டே கொடுத்துட்டு, ‘மிச்சம் இருந்தா குடுங்கண்ணா’னு சொன்னது இப்பவும் ஞாபகம் இருக்கு. அப்புறம் அதுவே கண்டினியூ ஆகிடுச்சு!

1.10 தான் லேடீஸ், ஜெண்ட்ஸ் காமன் டிக்கெட், அதுக்கு அடுத்து பெரிய டிக்கெட் 2.25, பாக்ஸ்ல  உக்காந்து  படம் பாத்தா 3.50 பைசா... மொத்தம் ஆயிரத்து நான்கு சீட். தியேட்டருக்கு முன்னாடியும், பின்னாடியும் ஒரே நேரத்துல முப்பது கார்களை விடற அளவுக்கு பார்க்கிங் வசதியோடு, தியேட்டருக்கு முன்னால அதே சைசுக்கு ஒரு பார்க்கையும் வெச்சு பராமரிச்சது, அகஸ்தியா தியேட்டரா மட்டும்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

கமலோட விக்ரம் படத்தின் சூட்டிங் இங்கதான் நடந்தது, கமலோட ‘நெக்’ க பக்கத்துல நின்னு பாத்துட்டுதான், அன்றைய மூர் மார்க்கெட்டுக்குப் போயி, ஏரியா பசங்க, ஆளுக்கு ஒரு கர்லா கட்டைய வாங்கி, அதே கமல் ‘நெக்’குக்கு முயற்சி பண்ணினோம். பாதிப்பேருக்கு அதுல கழுத்துல வலி வந்ததுதான் மிச்சம் ! ‘நெக்’ வெச்ச டி சர்ட், ஹாம்ஸ் வெச்ச டிசர்ட்டுன்னு டிசைன் டிசைனா வாங்கி  ஷோ காட்ற அளவுக்கு கர்லாவோடவே சில காலம் வாழ்க்கையை ஓட்டினது

இன்னொரு தனிக்கதை. புகைப்படக்கலைஞரும் செய்தியாளருமான தம்பி, அசோக்கை காலையில பாத்தப்ப, ‘நாளைலருந்து தியேட்டர் குளோஸ் ண்ணே’னு சொன்ன ஒரு வரியில் நிலைகுலைந்து போனேன். எழுதவேண்டியது நிறைய. ஆனா, எழுதமுடியலே” என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார் ந.பா. சேதுராமன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com