’மோகன்லால் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார் என்பது வதந்தி’ - அஜித் தரப்பு விளக்கம்!
மோகன்லால் இயக்கும் ‘பாரோஸ் ; கார்டியன் ஆப் தி காமாஸ் ட்ரெஷர்' படத்தில் அஜித் நடிப்பதாக வெளியான தகவலை அஜித்தின் தரப்பு மறுத்துள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் முதன்முறையாக ‘பரோஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முதல் தொடங்கியது. இப்படத்தில் பிரித்விராஜும் மோகன்லாலும் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்கள். குழந்தைகளுக்கான படம் என்பதால் 3 டியில் உருவாகிறது. இப்படத்திற்கு, லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தில் மோகன்லால் கேட்டுக்கொண்டதற்காக அஜித் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல் பரவி வந்தது. இதனை அஜித் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் புதிய தலைமுறை தொடர்புகொண்டு கேட்டபோது, “இது முற்றிலும் வதந்தி. அஜித் ரசிகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம்” என்று கூறினார்.