சம்பள பிரச்னையா? நடிகர் சங்கத்துக்கு ’96’ தயாரிப்பாளர் எதிர்ப்பு!
மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு நடிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்று நடிகர் சங்கம் அறிவித்துள்ளதற்கு தயாரிப்பாளர் நந்தகோபால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட், விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி, விஷால் நடித்த கத்தி சண்டை, துப்பறிவாளன், விஜய் சேதுபதி நடித்த 96 உட்பட பல படங்களை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் தயாரித்தவர் நந்தகோபால். இந்நிறுவனம் படத்தில் நடித்த ஹீரோக்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாகவும் அதனால் இந்நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்றும் சமீபத்தில் நடிகர் சங்கம் அறிக்கை மூலம் நடிகர் சங்க உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது.
சம்பள விவகாரத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் நந்தகோபால், ‘கத்தி சண்டை’ பட ரிலீஸுக்கு முன்பே நடிகர் விஷாலுக்கு சம்பளத்தை கொடுத்துவிட்டேன். ’96’ படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் முழு சம்பளத்தையும் வழங்கிவிட்டேன். இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் எனது மனசாட்சிக்குட்பட்டு செயல்பட்டு வருகிறேன்.
இந்த விவகாரம் தொடர்பாக, நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி ஒன்று எனக்கு வந்திருக்கிறது. நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அறிக்கையை அனுப்பினார்களா அல்லது சிலர் வேண்டுமென்றே அனுப்பியிருக்கிறார்களா என்று தெரிய வில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் திங்கள் கிழமைக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும். சங்கம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். சங்கம் முடிவெடுக்கவில்லை என்றால் நான் ஒரு முடிவை எடுத்து அறிவிக்க உள்ளேன்’ என்றார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மோதல் ஏதும் இருக்கிறதா என்ற கேள்விக்கு அது குறித்த முழுமையான பதில் திங்கள் கிழமை தெரிவிக்கிறேன்’ என்றார். அதோடு, தயாரிப்பாளர் சங்கம் காலம் தாழ்த்தினால், இந்திய போட்டி கமிஷன் மூலம் தகுந்த மேற் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் சொன்னார்.