“என்னை விட்டுவிடுங்கள்” - செய்தியாளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்ட நானா படேகர்
தமிழில் ‘பொம்மலாட்டம்’,‘காலா’,‘தீராத விளையாட்டு பிள்ளை’படங்களில் நடித்தவர் இந்தி நடிகர் நானா படேகர். இவர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். நானா படேகர் மீதான தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் புகார் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை கிளப்பியது.
தனுஸ்ரீயின் புகாரை மறுத்த நானா படேகர், இது பொய்யான புகார். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்குத் தொடர்வேன் என்று கூறியிருந்தார். அதன்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா உட்பட 4 பேர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த சனிக்கிழமை போலீஸில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் தனுஸ்ரீ புகார் தொடர்பாக நானா படேகர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்காமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் நானா படேகர் தனது இல்லம் முன்பு செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவித்து இருந்தார். ஆனால், செய்தியாளர் சந்திப்பை பின்னர் ரத்து செய்தார். இருப்பினும், செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்காக காரணம் குறித்து அறிய சில செய்தியாளர்கள் நானா படேகர் இல்லம் முன்பு திரண்டு இருந்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நானா படேகர், “என்னுடைய வழக்கறிஞர்கள் யாரிடமும், எந்த ஊடகங்களிடமும் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இல்லையென்றால், வழக்கம் போல் உங்களை சந்தித்து பேசியிருப்பேன். அவர்கள் கேட்டுக் கொண்டதால் உங்களை சந்திக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்ன சொன்னனோ, அதனையேதான் இப்பொழுதும் சொல்வேன். உண்மை எப்பொழுதும் உண்மைதான். காலம் மாறினால் உண்மையும் மாறாது” என்று கூறியுள்ளார்.
சில நிமிடங்களே பேசிய நானா படேகர் செய்தியாளர்களை பார்த்து கையை உயர்த்தி கும்பிட்டு, ‘தன்னை விட்டுவிடுங்கள், இங்கிருந்து செல்லுங்கள்’ என்று கூறினார்.