வந்துட்டேன்னு சொல்லு.. வடிவேலு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு
‘இந்தியன்2’ படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. அதன் இரண்டாம் பாகத்தை இப்போது மீண்டும் இயக்க இருக்கிறார் ஷங்கர். அதற்கான அறிவிப்பை தைவானில் இருந்து ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு உறுதி செய்தார். ஷங்கரின் ‘இந்தியன்’ முதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்றது. ஊழல் எதிர்ப்பு அரசியலை வெளிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் பரவலாக பெரிய பெயரை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. அதனை அடுத்தே அதன் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர். முதல் பாகம் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கலந்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திலும் அதே போல ஒரு நிஜ தலைவரின் வரலாற்றை ஷங்கர் சேர்ப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. முதல் பாகத்தில் கவுண்ட மணியின் காமெடிதான் படத்தையே தூக்கி நிறுத்தியது. அதே அளவுக்கு இரண்டாம் பாக காமெடியும் இருக்க வேண்டும் என்பதால் வடிவேலுவை தேர்வு செய்திருக்கிறார்கள். சமீப காலமாக வடிவேலு படங்களில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். அவர் நடித்த சில படங்களும் சரியாக போகவில்லை. அவருக்கு ‘இந்தியன்2’ ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தத் தகவலை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.