‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தர்புகா சிவா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில், படம் இரண்டு வருடமாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இதனிடையே, இந்தப் படத்தின் புதிய ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு, படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்தப் படத்தை எதிர்நோக்கி பதிவுகளையும் மீம்ஸ்களையும் பதிவிட்டனர். ஆனால், படத்தின் மீதான பிரச்னை தீர்க்கப்படாததால், படம் அன்று ரிலீஸ் ஆகவில்லை.
அதனையடுத்து, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அறிவித்தார். கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், நவம்பர் 15 ஆம் தேதி படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்தார். அதுதொடர்பாக போஸ்டரும் வெளியானது.
இந்நிலையில், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. நவம்பர் 29 ஆம் தேதி படம் வெளியாகும் என்று புதிதாக வெளியாகியுள்ள போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் பி.மதன் வெளியிடுவதாக இருந்த நிலையில், தற்போது வெளியான போஸ்டரில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் வெளியிடுவதாக உள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல தேதிகளில் படம் வெளியாகாமல் தள்ளி போனது. அதனால், இந்த தேதியிலாவது திரைப்படம் வெளியாகுமா என்று தனுஷ் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.