“என்னை விமர்சித்தவர்கள் எல்லாம் இன்று சவ்கிதார்” - நடிகர் சித்தார்த்
தன்னை யாரெல்லாம் வெறுத்து, மிரட்டி, தவறாக பேசினார்களோ அவர்கள் தான் இன்று சவ்கிதார் எனக் கூறிக்கொள்வதாக நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளார்.
‘சவ்கிதார்’ என்ற வார்த்தை அண்மைக்காலமாக இணையத்தில் பிரபலமடைந்துள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி. அவர் தனது பெயரை ‘சவ்கிதார்’ மோடி என ட்விட்டரில் மாற்றியுள்ளார். அதற்கு பாதுகாவலன் என்பது அர்த்தமாகும். அவரைத் தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் என அனைவரும் தங்கள் பெயருக்கு முன்னர் ‘சவ்கிதார்’ எனச் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் ‘சவ்கிதார்’ தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சித்தார்த், “நான் தேவைப்படும் போது, அனைத்து பெரிய கட்சிகளுக்கு எதிராகவும் பேசியுள்ளேன். ஒரு கூட்டத்தினர் மட்டுமே என்னை வெறுத்து, மிரட்டி, தவறாக பேசி இழிவுபடுத்தி வந்தனர். தற்போது அவர்களில் பெரும்பாலோனோர் தங்களை ‘சவ்கிதார்’ எனக் கூறிக்கொள்கின்றனர். தற்போது பாஜக தொழில்நுட்பப் பிரிவு என்னைப் பற்றி பரப்பும் போலி செய்திகளை தொடர்ந்து படித்து வருகிறேன்” என்று விமர்சித்துள்ளார்.